மேலும் அறிய
சிவகங்கை கலைத்திருவிழா 2025: பசுமையும் பாரம்பரியமும், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு !
சிவகங்கை மாவட்டத்தில் கலைத்திருவிழாப் போட்டிகள், அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு நடைபெறுகிறது.

கலைத் திருவிழா
Source : whats app
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் தங்களின் திறமையை நிரூபித்து, அதிக அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி பட்டம் வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
பசுமையும் பாரம்பரியம் - 100 போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகள், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு, "பசுமையும் பாரம்பரியமும்" என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல் வெளியிட்டுள்ளார். அதில்..,” பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் கலைத்திருவிழாவில், 01 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கவின்கலை, இசை, நடனம், கருவி இசை மற்றும் நாடகம் என 100 போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
1350 பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
இதில், பிரிவு 1-ன் கீழ் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு 6 போட்டிகளும், பிரிவு 2- ன் கீழ் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாகர்களுக்கு 12 போட்டிகளும், பிரிவு 3-ன் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 14 போட்டிகளும், பிரிவு 4-ன் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 34 போட்டிகளும், பிரிவு 5-ன் கீழ்11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு 34 போட்டிகளும் என ஆக மொத்தம் 100 எண்ணிக்கையிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதில், முதற்கட்டமாக பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று 4.8.2025 தொடங்கப்பட்டு, வருகின்ற 18.8.2025 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 1,350 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,32,979 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
போட்டி நடைபெறும் நாட்கள்
பள்ளி நிலையின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பிரிவிற்கு வருகின்ற 4.8.2025 முதல் 18.8.2025 வரை பங்கேற்பாளர் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள் ஆகும். குறுவட்டம் (Cluster) நிலையின் கீழ்1 முதல் 5-ம் வகுப்பு வரையான பிரிவிற்கு வருகின்ற 25.08.2025 முதல் 29.08.2025 வரை பங்கேற்பாளர் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள் ஆகும். வட்டாரம் நிலையின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பிரிவிற்கு வருகின்ற 13.10.2025 முதல் 17.10.2025 வரை பங்கேற்பாளர் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள் ஆகும். மாவட்டம் நிலையின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பிரிவிற்கு வருகின்ற 27.10.2025 முதல் 31.10.2025 வரை பங்கேற்பாளர் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள் ஆகும். மாநிலம் நிலையின் கீழ் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பிரிவிற்கு வருகின்ற 24.11.2025 முதல் 28.11.2025 வரை பங்கேற்பாளர் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் போட்டி நடைபெறும் நாட்கள் ஆகும்.
கலையரசன் மற்றும் கலையரசி பட்டம் வழங்கப்படும்
மேலும், வட்டார அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றிபெறும் தனிநபர், குழுவினர் மட்டுமே, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றவராவார். மாவட்ட அளவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடத்தில் வெற்றிபெறும் தனிநபர், குழுவினர் மட்டுமே, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றவராவார். குறிப்பாக, மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் தங்களின் திறமையை நிரூபித்து, அதிக அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி பட்டம் வழங்கப்படும். எனவே, பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தி அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி அவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















