விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்...!
’’விநாயகர் சதுர்த்தி விழா வருவதையடுத்து தேனி மாவட்டம் கோம்பை , பொம்மையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை தயார்செய்யும் பணிகள் மும்முரம்’’
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிவரும் நிலையில், தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டைப் போல் தீவிர கட்டுப்பாடு தமிழக அரசு விதிக்காமல், சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகளை பொது வெளியில் வைத்து வழிபாடு நடத்தப்படும். பின் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டன. இருப்பினும் பல இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி ஆற்றில் கரைக்கப்பட்டதையும் பல இடங்களில் காண முடிந்தது.
கடந்த ஆண்டு, அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்த இடங்களிலேயே விற்பனையாகாமல் தேங்கின. இதே போன்று தேனி மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான சிலைகள் தேக்கம் அடைந்தன. இதன் காரணமாக சிலைகள் உற்பத்தி செய்தவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கோவில் விழாக்களுக்கும், விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேனி பொம்மையகவுண்டன்பட்டி, டெலிபோன் நகரிலும் , உத்தமபாளையம் கோம்பை பகுதியிலும் பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிலைகளை வாங்கிச் செல்வார்கள். இங்கு 3 அடி முதல் 13 அடி வரையிலான சிலைகள் செய்யப்பட்டு, பின் சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தாமரையில் விநாயகர், சிங்க வாகனம், கழுகு, பாம்பு, மயில் வாகனம், நந்தி, குதிரை வாகனம் போன்றவற்றில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள் என விதவிதமாக தயாராகியுள்ளன. மேலும் நரசிம்மர் மற்றும் சிவன் வேடத்தில் விநாயகர், சோபாவில் அமர்ந்திருக்கும் விநாயகர் போன்ற வடிவங்களிலும் சிலைகள் தயாராகியுள்ளன.
இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டத்தில் சுமார் 1,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போன்று சிலைகள் வைக்க தடை விதிக்காமல், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகத்துடன் கொண்டாட அரசு அனுமதிக்க வேண்டும் என்பது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வருடமாக வருமானமில்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள