ராமேஸ்வரம் கோயிலில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட புனித தீர்த்த கிணறுகள்
’’கடந்த சில மாதங்களில் வெளிமாநில பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. தற்போது தடை விலக்கி கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்ப்பு’’
கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளிலும் தற்போது நீராடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் 22 புனித தீர்த்த கிணறுகளில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.கொரானா பரவல் காரணமாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. கொரானா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் நேரடியாக சாமி தரிசனம் செய்யவும்அடுத்து கோவில்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட தடை நீட்டித்தது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புண்ணிய தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக, பொழுதுபோக்கு கேளிக்கை மற்றும் சுற்றுலா தளங்களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி கொடுக்க மறுப்பதை கண்டித்து, அதிமுக, பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று முதல் 22 தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரானா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து, ஜூலை 5 முதல் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கும், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடவும் மட்டமே அனுமதி அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்ககப்படவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தடை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எனினும் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது.
தமிழக அரசு உடனடியாக ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்த புண்ணிய தலத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டால் மட்டுமே ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் பக்தர்கள் வந்தால் மட்டுமே கோவில்களில் புனித தீர்த்தத்தில் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் மற்றும் ராமேசுவரம் கோவிலை சுற்றியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் ராமேசுவரம் பகுதியில் அமைந்துள்ள 200-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் புரோகிதர்கள் என 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக இங்கு வரும் பக்தர்களை நம்பி வாழ்ந்து வரும் நிலை இருக்கிறது.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று ராமேசுவரம் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி முதல் 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடலாம். ராமேசுவரம் கோயிலில் வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருவர். 22 தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்காததால் கடந்த சில மாதங்களில் வெளிமாநில பக்தர்கள் வருகை கணிசமாக குறைந்திருந்தது. தற்போது தடை விலக்கி கொள்ளப்பட்டதால் இனிவரும் காலங்களில் பக்தர்கள் அதிக அளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.