ராமநாதபுரத்தில் வழிப்பறி நடப்பதாக வெளியான வீடியோ-மாற்றி பேசி வீடியோவை வெளியிட்ட போலீஸ்
தனது வீடியோ சமூக வலை தளங்களில் பரவியால் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும்,அதனால் ஏற்பட்ட குழுப்பத்திற்கும் நாந்தான் காரணம் என ராம்குமார் பேசிய மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கல்லெறிந்து அதில் பயணம் செய்பவர்களின் கவனத்தை திசை திருப்பி வாகனங்களிலிருந்து அவர்களை இறங்க வைத்து, நூதன முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கியது. அதே வேளை அப்பகுதியில் வசிக்கும் அப்பாவி பொது ஜனங்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை வழிப்பறி பகுதி எனவும், ஆபத்தான ஏரியா என காணொளியில் பேசியிருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இது ஒருபுறமிருக்க, மாவட்ட காவல்துறை க்கு இது பெரும் தலைவலியை உண்டாக்கியது. ஏனெனில், அந்தப்பகுதியில் தொடர்ந்து நடக்கும் நூதன வழிப்பறி சம்பவத்தை இதுநாள் வரை கண்டுபிடிக்க இயலாமல் போனதாக ஏளனப்பேச்சுக்கு ஆளானார்கள். வீடியோ வைரலாக பரவியதையடுத்து அந்தப்பகுதியில் சென்று விசாரித்த போலீசார், அங்கு இதுவரை அதுபோன்ற வழிப்பறி சம்பவம் நடைபெறாததை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து அந்த வீடியோ குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது. இது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெரும் சவாலானது.
எஸ்.பி.கார்த்திக் அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வேகமெடுத்த சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் காணொளியை பரப்பியவர் உச்சிப்புலியை சேர்ந்த 'ராம்குமார்' என்பவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை தட்டித்தூக்கிய போலீசார் ராமநாதபுரத்திற்கு கொண்டு வந்தனர்.
அவர் காணொலியை ஒப்பிட்டு பார்த்து அவரிடம் விசாரித்ததில், கடந்த ஒன்றாம் தேதி அந்தப்பகுதியில் இவர் கார் கடந்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் வீசியெறிந்த செருப்பொன்று காரின் முன்புற கண்ணாடியின் இடதுபுறத்தில் விழுந்து கீறல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் ஒருவர் சிவப்புக்கலர் தண்ணீர் குடத்தில் இருந்த நீரை கீழே கவிழ்த்து கொட்டியதை 'அவர் தனது கும்பலுக்கு தரும் சிக்னல்' என மிகைப்படுத்தி குறிப்பிட்டிருந்ததை ஒப்பீடு செய்து அது பொய்யான 'புட்டப்' வீடியோ என்பது அம்பலமானது.
இதனால் தனது வீடியோ சமூக வலை தளங்களில் பரவியால் ஏற்பட்ட சர்ச்சை குறித்தும்,அதனால் ஏற்பட்ட குழுப்பத்திற்கும் நாந்தான் காரணம் என ராம்குமார் பேசிய மற்றொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக தனது காரில் இருந்த சிசிடிவி பதிவு காட்சியை வைத்து மிகைப்படுத்தி தன் மனதில் தோன்றிய கற்பனை உண்மை போல சித்தரித்து அதை வீடியோவாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி மாவட்ட காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அந்தப் பகுதியை கடந்து செல்வோருக்கெல்லாம் தேவையில்லாத பீதியை ஏற்படுத்திய ஒரு 'விளம்பர விரும்பி' ஆசாமிக்கு தக்க பாடம் நடத்தியதுடன் பொதுமக்களின் பயத்தை போக்கிய மாவட்ட காவல்துறையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.