பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?
நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், நாளை பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதியடைய வாய்ப்புள்ளது.
பழனி முருகன் கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள், உதவி ஆணையர் லட்சுமி அவமரியாதையாக பேசியதாக கூறி அவரை கண்டிக்கும் விதமாக இரண்டாவது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவிடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதற்கென கோவில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம் , மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை செலுத்தலாம். இங்கு 330 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால் இவர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது, இவர்களுக்கு தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணியாளருக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், காணிக்கை செலுத்தும் இலவச டிக்கெட்டுகளில் 30 ரூபாய் பங்கு வீதம் மாதம் தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து இவர்களுக்கு பங்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களிடம் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக புகாரின் அடிப்படையில் உதவியாளர் லட்சுமி இருவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து கடந்த 15 நாட்கள் பின்பு இரு தொழிலாளர்கள் உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பணியில் சேர்வதற்கு கோரியுள்ளனர்.
அப்போது தங்களது மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவேன் என்று கூறியுள்ளார், இதனை அடுத்து கோவில் பணியாளர் தமிழ்செல்வன் மற்றும் குமரேசன் உதவி ஆணையரை சந்திக்க மனைவிகளை அழைத்துச் சென்றபோது, தங்களுடைய கணவர்களை தினமும் திருடுவதற்கு அனுப்பி விட்டீர்களா என்றும் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள், இந்த காசை வைத்து எப்படி பிழைக்கறீர்கள் என்றும் நல்லா இருக்க மாட்டீர்கள் நாசமாய் போவீர்கள் என்றும் தொடர்ந்து அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் கண்ணீருடன் ஊழியர்கள் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து முடி காணிக்கை செலுத்தும் தொழிலாளர்கள் நேற்று உதவி ஆணையர் லட்சுமியை கண்டிக்கும் விதமாக கண்டன பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டு கொண்டு நூதன முறையில் பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட நேற்று வராததால், இன்றும் உதவி ஆணையர் லட்சுமியை கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், நாளை பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதியடைய வாய்ப்புள்ளது. மேலும் உதவியாளர் லட்சுமி கடந்த சில நாட்கள் முன்பு கோழி சேவல் விடுவதில் சர்ச்சையிலும் , அதே போல சாலையோர வியாபாரி பெண்ணை தாலிச் சங்கிலி பிடித்து இழுத்தும், பல்வேறு சர்ச்சைகள் சிக்கி உள்ள நிலையில் மீண்டும் கோவில் முடி எடுக்கும் தொழிலாளர் மனைவியை தர குறைவாக பேசி உள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.