பழனியில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்; பாறையில் ஏறி மேலே சென்ற போதை ஆசாமியால் பரபரப்பு...!
உலகப்புகபெற்ற பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற உலக புகழ்வாய்ந்த முருக கடவுளின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. இவை தவிர பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன.
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல பெரும்பாலானோரின் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது. பழனி அடிவாரம் கிழக்கு கிரிவீதியில் ரோப்கார் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த ரோப்கார் சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்றது.இந்த பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று மாலை மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது. முன்னதாக ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ரோப்கார் சேவை தொடங்கியதை அடுத்து, அதில் பக்தர்கள் உற்சாகத்துடன் கோவிலுக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் ரோப்கார் அமைந்துள்ள பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் ரோப்கார் வரிசையில் செல்வது போல் பாசாங்கு செய்து அருகில் இருந்த பாறைகளின் வழியே ஏறி வேகமாக ஆபத்தான முறையில் மலைமீது ஏறினார். இதுகுறித்து அங்கு இருந்த பக்தர்கள் கோவில் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பாதுகாவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் போதை ஆசாமியை விரட்டிப்பிடித்து கீழே அழைத்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் போதை ஆசாமியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் மதுபான பாட்டில் இருந்ததும், குடிபோதையில் மலைக்கோவிலுக்கு மேலே சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்