காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் - கே.எஸ்.அழகிரி
'இராமரை காட்டி தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது, இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற முடியும்’ - கி.வீரமணி
மதுரை பழங்காநத்தத்தம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. இதில் தி.க., தலைவர் கி.வீரமணி, தி.மு.க., எம்.பி டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். சேது சமுத்திரத் திட்டத்தில் மதம். அரசியலை புகுத்த கூடாது. இராமாயணம் நடந்ததா இல்லையா. இராமர் இருந்தாரா இல்லையா எனும் விவாதத்துக்குள் செல்லவில்லை.
சேது சமுத்திரத் திட்டத்தால் தென் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த ஆர்.எஸ்.எஸ் இராமர் பெயரை பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சமூக நீதியை ஓரளவுக்கு அடைந்து இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும். காமராஜர் அணைகள், தொழிலைச் சாலைகள் கொண்டு வந்ததால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றது, சேது சமுத்திரத் திட்ட உண்மைத் தன்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்ய வேண்டும்" என பேசினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசுகையில், "சேது சமுத்திரத் திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சியை பெற்றிருக்கும், 5 ஆண்டுகளுக்கு முன்னரே சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றி இருக்க வேண்டும், குழந்தையை பெற்று ஊனம் ஆக்கப்பட்டது போல சேது சமுத்திரத் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆதாம் பாலம் வழியாகவே சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வர வேண்டும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை காலதாமதம் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். அருண் ஜெட்லி, நிதிஷ் குமார், கோயல், ஜார்ஜ் பெர்னாண்டாஸ் உள்ளிட்டவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். சேது சமுத்திரத் திட்டம் 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 23 கிலோ மீட்டர் தொலைவு பணிகள் முடிக்கப்பட வேண்டும். அமைச்சர் உமா பாரதி 81 இடங்களில் போர் போட்டு பரிசோதனை செய்யும் போது இராமர் பாலம் சேதமடையவில்லையா?, சேது சமுத்திரத் திட்டப் பாதையில் எந்தவொரு கட்டங்களும் இல்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. சேது சமுத்திரத் திட்டம் குறித்து அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வருவதற்கு 6 மாவட்டங்களில் 2 ஆண்டுகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கருத்து கேட்புக் கூட்டத்தில் இராமர் பாலம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.
தமிழக மக்களுக்கு பாஜக துரோகம் செய்கிறது நான் சாபம் விடுகிறேன் 2024 பாஜக வெற்றி பெறாது. சேது சமுத்திரத் திட்டத்தில் மத சாயம் பூசக் கூடாது, மக்களின் மத நம்பிக்கை இடத்துக்கு இடம் மாறாது என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். இராமர் பாலம் விவகாரத்தில் நாசா வெளியிட்ட புகைப்படம் உண்மை, ஆனால் அதன் கருத்து உண்மைக்கு புறம்பான பொய், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் மிகவும் அமைதியாக இருந்து விட்டேன், குறைந்த பட்ச அறிவு இருப்பவர்கள் கூட இராமர் பாலம் இருக்கிறது என்பதை நம்ப மாட்டார்கள், சேது சமுத்திரத் திட்ட இடத்தில் நிரந்தர கட்டட அமைப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது நிரூபிக்க முடியவில்லை, பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் பாஜக அரசு ஏன் இராமர் பாலத்தை வேலி போட்டு பாதுகாக்கவில்லை, இராமர் பாலம் உள்ளது என்பதை மக்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள், இதற்கு எதிராக புரட்சி வெடித்து இருக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி இருந்தால் 70 சதவீத கப்பல் வந்திருக்கும், வருடத்திற்கு 700 கோடி வருவாய் கிடைத்திருக்கும், தமிழக மக்கள் 40 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றால் 2024 ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், திமுக ஆட்சி காலத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது எங்களின் கடமையாகும்" என பேசினார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசுகையில் "சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம்மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இளைஞர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்காது. சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் பாஜக பிடிவாதம் பிடித்து வருகிறது. வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.
சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என டி.ஆர்.பாலு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால் சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும், சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் அரசியல் சட்டத்தின்படி அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்ட கால்வாயை இனிமேல் நாங்கள் தமிழின் கால்வாய், திராவிட கால்வாய் என அழைப்போம், சேது சமுத்திரத் திட்டத்தில் மக்கள் நம்பிகையை இழக்க வேண்டாம், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேறியதால் முதல் வெற்றி பெற்றிருக்கும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பிப்ரவரி 3 ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் தொடங்கப்படும், ஒன்றரை மாதங்கள் தமிழ்நாடு முழுதும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பிரச்சாரம் செய்ய உள்ளோம், இளைஞர்கள் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வர ஆதரவு கொடுக்க வேண்டும், இராமரை காட்டி தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியாது, இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற முடியும்" என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்