5 கோடி பணத்தை இரட்டிப்பாக்கவே காரைக்குடி வந்தோம்- பணம் பிடிப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்...!
5 கோடி ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக நம்ப வைத்து, சூரிய கிஷோர் தன்னை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், இங்கிருக்கும் நண்பர்களை வைத்து பணத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டதாகவும் புகார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்டம், குன்றக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைக்குடி - குன்றக்குடி செல்லும் சாலையில் ராஜீவ்காந்தி நகர் அருகே கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு கார்களை மறித்து அவ்வழியாக ரோந்து சென்ற சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் ராஜ்குமார். மணிகண்டன். சேலம் மாவட்டம் குமார், சண்முக ஆனந்த், கோயம்புத்தூர் மாவட்டம் காமராஜ் திருச்சி மாவட்டம் மற்றும் சூரியகிஷோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் மேற்படி கார்களை தணிக்கை செய்ததில் இருவாகனங்களிலும் சீட்டுக்கு பின்புறம் ஜவுளிக்கடை பைகள் மற்றும் பேக்கில் 500 மற்றும் 2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 பேரிடமும் போலிசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பையில் சுமார் 5 கோடி பணம் இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் ராஜ்குமார் என்பவர் சேலத்தில் சிக்ஸ் சிக்மா ரெடி மிக்ஸ் கன்சர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் வைத்திருந்ததாகவும் காரைக்குடி அருகே நிலம் விலைக்கு வாங்க வந்ததாகவும் அங்கிருந்த நபர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் ஒருவர் புரோக்கர் என்றும் மற்றவர்கள் அவர்களுக்குத் துணையாக வந்ததாக கூறினார்கள்.
பின்னர் காரைக்குடி வருமான வரித்துறை அலுவலர் மகேஸ்வரி என்பவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்பு மதுரை மண்டல வருமான வரித்துறை இயக்குநர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். குன்றக்குடி காவல்நிலைய ஆய்வாளர் தேவகி இப்பணம் சம்மந்தமாக மேல்நடவடிக்கை எடுக்க ஒரு அறிக்கை அளித்ததின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் 10 பைகளில் இருந்த பணத்தை கைப்பற்றினர். பின்பு ஸ்டாலின் வருமான வரித்துறை துணை இயக்குநர் தலைமையில், பணத்தின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் அவரது வழக்கறிஞர் முன்னிலையில் இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டதில் ரூபாய் 4 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் அனுப்பிய தனி அறிக்கையின் பேரில் பணத்தையும் சம்பந்தப்பட்ட எதிர் மனுதாரர்களையும் காரைக்குடியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது, இந்நிலையில் பணத்தின் உரிமையாளரான சேலத்தை சேர்ந்த ராஜ்குமார், தன்னிடமிருந்த 5 கோடி ரூபாயை இரட்டிப்பாக்கி தருவதாக நம்ப வைத்து, சென்னையை சேர்ந்த சூரிய கிஷோர் தன்னை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், காரைக்குடியில் இருக்கும் தனது நண்பர்களை வைத்து பணத்தை பறிமுதல் செய்ய திட்டமிட்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ராஜ்குமாரிடம் புகாரை பெற்ற குன்றக்குடி காவல் நிலையத்தினர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ராஜ்குமாரை ஏமாற்றி அழைத்து வந்த சென்னையை சேர்ந்த சூரியகிஷோர், காரைக்குடியைச் சேர்ந்த ரோஷன் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மற்றும் உடந்தையாக இருந்த சில நபர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்போகும் மதுரை - முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்...!