மேலும் அறிய
Advertisement
குழம்புக்கு போடும் புளி தெரியும்.. அது என்ன பொந்தன் புளி: நம்பிக்கையால் காப்பற்றப்பட்ட பிரமாண்ட மரம்!
நம்பிக்கைகளும், மக்கள் வழிபாடும் இருப்பதால் இம்மரங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன.
மக்கள் நம்பிக்கைகளால் காப்பாற்றப்பட்ட பிரமாண்ட பொந்தன் புளி மரங்கள்
பிரமாண்டமான பொந்தன் புளி மரங்களை மக்கள் புனிதமாக கருதி வழிபட்டு வருவதால் அவை அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன. தென்தமிழ்நாட்டின் நீண்ட கிழக்குக் கடற்கரையும், இயற்கையாக அமைந்த உப்பங்கழிகளும் பல இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் பலர் சங்ககாலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர். அவ்வாறு வந்த வணிகர்களால் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா ஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன் புளி மரங்கள், பாண்டிய நாட்டின் கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் வளர்ந்து வருகின்றன. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக இம்மரம் பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் மன்னர் காலத்தில் நடப்பட்டுள்ளன.
அரிதாக காணப்படும் பொந்தன் புளி மரம்
இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு நம்மிடம்...,” ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், சேந்தனேந்தல், அழகன்குளம், ஏர்வாடி தர்கா, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம், விருதுநகர் மாவட்டம் மண்டபசாலை, ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லூரி, இலங்கையில் மன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் வளர்ந்து வருகின்றன. ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக் கூடிய பெரிய அளவிலான பொந்துகள், யானை போன்ற மிகப் பிரமாண்டமான அடிமரம், பயன்தரும் கனிகள், பட்டைகள் ஆகியவை இம்மரத்தின் சிறப்புகள். 25 மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய இதன் அடிமரத்தின் சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை இருக்கும். ஓராண்டில் ஆறு, ஏழு மாதங்கள் வரை இதில் இலைகள் உதிர்ந்து காணப்படும். நீண்ட காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் இதன் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இம்மரங்கள் சாதாரணமாக 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை.
இந்த மரத்திற்கு இத்தனை பெயரா
பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவை ஆகியவற்றால், இம்மரத்தை தமிழர்கள் பொந்தன்புளி, யானைமரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி, பெரும்புளி என பல பெயர்களில் அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் போபாப் எனப்படுகிறது. கடற்கரை துறைமுகப் பட்டினங்களின் அருகிலும், வணிகப் பெருவழிகளிலும் வளர்ந்து வருவதன் மூலம், குதிரைகளை கப்பலில் இருந்து இறக்கி, மதுரை உள்ளிட்ட பாண்டிய நாட்டின் நகரங்களுக்கு கொண்டு செல்லும் வழிகளில் அவற்றின் தீவனத்திற்காகவும், வணிகர்கள் மற்றும் அவர்களின் படைகள் தங்கிச் செல்வதற்காகவும் இம்மரம் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஆயிரம் முதல் 100 ஆண்டுகள் வரை வயதுடையவையாக இம்மரங்கள் உள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, புல்லங்குடி உள்ளிட்ட சில இடங்களில் இம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இராமேஸ்வரத்தில் இம்மரம் உள்ள பகுதி பொந்தன்புளி என்றே அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பெயரால் கமுதி அருகில் பொந்தன்புளி என்று ஒரு ஊர் உள்ளது. ஆனால் இவ்வூரில் இம்மரம் தற்போது இல்லை.
நம்பிக்கையில் வாழும் மரம்
ராமநாதபுரம் பெரியார் நகர், ஏர்வாடி ஏரான்துறை, அழகன்குளம், தங்கச்சிமடம், தேவிபட்டினம், மும்முடிச்சாத்தான், அருங்குளம், வேதியரேந்தல், மண்டபசாலை உள்ளிட்ட பல இடங்களில் இம்மரங்கள் கிராமக் கோயில்களாக மக்களின் வழிபாட்டில் உள்ளன. தேவிபட்டினம் தவிர்த்து மற்ற இடங்களில் இம்மரம் முனீஸ்வரர் கோயிலாக வழிபடப்படுகிறது. மரத்தில் தெய்வம் குடியிருப்பதாகவும், இதை வெட்டுபவர்கள் இறந்துபோவார்கள் அல்லது நோயில் விழுவார்கள் எனவும் மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளும், மக்கள் வழிபாடும் இருப்பதால் இம்மரங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன”.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion