Madurai Ring Road: மதுரையை சுற்றி 53 கி.மீ., நீள சாலை, 20 நிமிஷம் போதுமாம் - தென்மாவட்டங்கள் பயணம் இனி ஈசி..
Madurai Outer Ring Road: மதுரையை சுற்றி அவுட்டர் ரிங் ரோட் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது.

Madurai Outer Ring Road: மதுரையை சுற்றி அவுட்டர் ரிங் ரோட் அமைக்கப்பட்டால், தென்மாவட்டங்களுக்கான பயணம் மிகவும் எளிதானதாக மாறிவிடும்.
மதுரை அவுட்டர் ரிங் ரோட்:
நகர்ப்புறத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மதுரையை சுற்றி அவுட்டர் ரிங் ரோட் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை விரைவில் செயல் வடிவம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு என இரண்டு அமைப்புகளும், தனித்தனி திட்டங்களை முன்னெடுத்துள்ளன. அதன்படி, மதுரை அவுட்டர் ரிங் ரோட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆலோசகரை நியமிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டத்தில், தாமரைப்பட்டி மற்றும் டி புதுப்பட்டி இடையே, 53 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. பசுமை வழித்தடமான இந்த மதுரை அவுட்டர் ரிங் ரோட் திட்டம், மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
சாலை பணிகள் எப்போது தொடங்கும்?
மதுரை அவுட்டர் ரிங் ரோட் திட்டம் தொடர்பாக பேசிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட அமலாக்கப்பிரிவின் திட்ட இயக்குனர் கீர்த்தி பரத்வாஜ், வெறும் ஆரம்பகட்ட பணிகள் மட்டுமே தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், :உரிய ஆலோசகர் நியமிக்கப்பட்ட பிறகு 11 மாதங்கள் கழித்து அவர் விரிவான திட்ட அறிக்கையை சமர்பிப்பார். அதற்கு அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, நிதி பெறும் நடவடிக்கையை தொடர்ந்து சாலை கட்டுமான பணிகள் தொடங்கும். திட்டம் இன்னும் தற்காலிகமானதாகவே உள்ளது. பசுமை வழித்திட்டம் என்பதால், பல்வேறு துறைகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்பு பெரும் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது” என கீர்த்தி பரத்வாஜ் விளக்கமளித்துள்ளார்.
20 நிமிடங்கள் போதும்..!
மதுரை அவுட்டர் ரிங் ரோட் அமைவது தொலைதூர பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். திண்டுக்கல், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக பெங்களூருவில் இருந்து வருவோர்கள் கூட, மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் அவுட்டர் ரிங் ரோட் மூலம் எளிதாக பயணிக்கலாம். அதன்படி, தென்மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை அடைவது எளிதாகும். மதுரை நகரை உட்புற சாலைகள் வழியாக கடந்து செல்வதற்கு தற்போது ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலான நேரம் செலவாகிறது. ஒருவேளை திட்டமிட்டபடி அவுட்டர் ரிங் ரோட் அமைக்கப்பட்டால், வெறும் 20 முதல் 30 நிமிடங்களில் மதுரையை வெளிப்புற சாலை வழியாக கடந்து செல்ல முடியும் என கூறப்படுகிறது.
இறுதிகட்டத்தில் முதற்கட்ட அவுட்டர் ரிங் ரோட்:
இதனிடையே, மதுரை அவுட்டர் ரிங் ரோட் திட்டத்தின் முதற்கட்டமான நகரின் வடக்கு பகுதி சாலை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. இது திருச்சி மற்றும் திண்டுக்கல் நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. 30 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த சாலையில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் நத்தம் சாலை, அலங்காநல்லூர் சாலை மற்றும் அழகர்கோயில் சாலை வழியாக நகரத்திற்குள் நுழையும் பல எண்ட்ரி பாயிண்ட்கள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் இணைப்புச் சாலையுடன், இணைக்கும் போக்குவரத்தை எளிதாக்க சித்தம்பட்டி டோல் பிளாசா அருகே ஒரு க்ளோவர்லீஃப் இன்டர்சேஞ்சிற்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் திட்டம்:
முன்னதாக 2025-26 நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டில், 48 கி.மீ நீளத்திற்கான மதுரை அவுட்டர் ரிங் ரோத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மாநில நெடுஞ்சாலைத் துறையால் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு அறிவித்த விரிவான திட்ட அறிக்கையை பொறுத்தவரை, திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம், அது மதுரை நகரின் மேற்கு சுற்றளவை இணைக்கும், ரிங் ரோடு சர்க்யூட்டில் உள்ள கடைசி பெரிய இடைவெளியை மூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறினால், மதுரை விரைவில் தடையற்ற ரிங் ரோட் போக்குவரத்து வசதியை பெறும்.






















