மேலும் அறிய
நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்: சாந்தியின் கனவு நனவானது.. ரூ.5 லட்சம் மானியத்தில் சொந்த நிலம்!
என்னுடைய சொந்த நிலத்தில் நான் விவசாயம் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இந்த திட்டத்தில் பயன்பெற என்னால் முடிந்த ஆலோசனைகள் கூறுகிறேன். - எனவும் பெறுமிதம்.

வாழை விவசாயம் (கோப்புப்படம்)
Source : whatsapp
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாடு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம். - முழுவிவரம்.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மகளிர் உரிமை தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என பெண்களுக்கு என்று சிறப்பாக கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் பயனடையும் விதமாக தமிழக அரசு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரூ.5 இலட்சம் மானியம்
தமிழக அரசு நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் (Tamil Nadu Land Purchase Scheme) என்பது சொந்த நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு சொந்த நிலம் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.5 இலட்சம் மானியம் வழங்கும் திட்டமாகும். பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் மானியம் வழங்கும் திட்டமாகும். சொந்த விவசாய நிலம் வாங்க மானியம் வழங்கி, விவசாய தொழில் செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடைமையாளர்களாக உயர்த்தி, அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதே நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
பத்திரப்பதிவு முழுவதும் இலவசம்
நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வசதியும் செய்துக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக, ஒவ்வொரு பயனாளியும் அதிகபட்சமாக இரண்டரை ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் மூலம் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பத்திரப்பதிவு முழுவதும் இலவசம். இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும், வாங்கப்படும் நிலம் SC,ST பிரிவைச் சேராத நில உரிமையாளர்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும். வாங்கப்பட்ட நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 11 பயனாளிகள் தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.55 இலட்சம் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர். 2025-26 ஆம் ஆண்டில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.35 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
வாழையில் வெற்றி - சாந்தி
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி சாந்தி தெரிவிக்கையில்...,” என்னுடைய பெயர் சாந்தி, விவசாயம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமாக நிலம் இல்லாத சூழ்நிலையில் தாட்கோவில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தை பற்றி தெரிந்து கொண்டேன். அந்த திட்டத்தின் கீழ் நான் ரூ.5 இலட்சம் மானியம் கொடுத்தார்கள். சோழவந்தான் தென்கரைப்பகுதியில் நிலம் வாங்கினேன். நிலம் வாங்கியவுடன் பத்திரப்பதிவுக்கு எந்த கட்டணமும் அரசு வாங்கவில்லை. முற்றிலும் இலவசமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்கள். தற்போது என்னுடைய பெயரில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இத்தகைய பெருமையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி அவர்கள் வழிகாட்டுதலின்படி அந்தப்பகுதி அதிக நீர்ப்பாசனப்பகுதி என்பதால் நான் என்னுடைய நிலத்தில் வாழை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். தற்பொழுது வாரம் ரூ.5,000 வீதம் மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறேன். என்னுடைய சொந்த நிலத்தில் நான் விவசாயம் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இந்த திட்டத்தில் பயன்பெற என்னால் முடிந்த ஆலோசனைகள் கூறி உதவி வருகிறேன். வேளாண் விற்பனை வணிகத்துறை அலுவலர்கள் உதவியுடன் வாழை மதிப்பு கூட்டுதலுக்கு தற்போது ஆலோசனை பெற்று வருகிறேன்” எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















