முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு!
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டு போக ஆயக்கட்டு விவசாயத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தினந்தோறும் வினாடிக்கு 300 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு.
தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரைக்கொண்டு விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்த ஆண்டு மழை பெய்து அணையின் நீர்மட்டம் 132.95 அடிவரை உயர்ந்ததால், முதல்போக விவசாயத்திற்கு ஜூன் முதல்நாள் தண்ணீர் திறக்க விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி, கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள மதகு பகுதியில் நடைபெற்றது.
”சிம்பு எனக்கு இன்ஸ்பிரேஷன்!” : மனம்திறந்த விக்னேஷ் சிவன்.. ட்ரோல் நெட்டிசன்களுக்கு ஒரு குட்டு..
தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி சுரங்க வாய்கால் பகுதியிலுள்ள ஷட்டரை இயக்கி, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பெறுத்து 120 நாட்களுக்கு சாகுபடிக்காக 200 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் சேர்த்து 300 கன அடியாக தண்ணீரை திறந்து விட்டார். விவசாயிகள் அனைவரும் தமிழகப்பகுதிக்கு வரும் தண்ணீரில் மலர்தூவி வரவேற்றனர்.
மேலும் விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி முரளிதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டேங்ரே, கம்பம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் விவசாயிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்