ABP Nadu EXCLUSIVE: சுவற்றில் அடிந்த பந்தாக தமிழகம் திரும்பும் அகதிகள்... அதிர்ச்சி தரும் லைவ் ரிப்போர்ட்!
‛‛எதுவுமே இல்லாமல் சாவதை விட, அகதியாக வாழ்ந்து விடலாம் என்று தான், மீண்டும் திரும்பி இந்தியா வந்துவிட்டேன்’’
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படி வாழ்வது என்பது தெரியாமல், அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அரசே கவிழ்ந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். தற்போதுள்ள பொருளாதார சூழலை சரி செய்ய, இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆண்டுகள் கூட ஆகலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இன்னும் போராட்டங்கள் அங்கு ஓயவில்லை. பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை, எதுவுமே இல்லை என்கிற நிலையில் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கிறார்கள். ரொட்டி தயாரிக்க கூட கோதுமை இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் வாடுகிறார்கள். இப்படி எல்லா வகையிலும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு, இடம் பெயருவதை தவிர வேறு வழியில்லை. அதிலும் இலங்கை தமிழர்களின் ஒரே சரணாலயம், தமிழ்நாடு மட்டுமே.
ஆம்... பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அரிச்சல்முனை கடற்கரையில் கரை ஒதுங்கிக் கொண்டிருக்கும் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைப்பட்டு வருகின்றனர்.
பதிவு பெற்ற அகதிகள் அதிகம்!
மண்டபம் அகதிகள் முகாமில், பதிவு பெற்ற அகதிகளாக 946 பேர் வாழ்கின்றனர். இவர்கள் 2009க்கு முன்பாக, அதாவது போர் நிறைவுக்கு முன்பாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பதிவு பெற்றவர்கள். பதிவு பெறுவதால், இவர்கள் அரசின் சலுகைகளை பெறுகிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரம் கிடைக்கிறது . பணி செய்கிறார்கள்; அதன் மூலமும் பலன் பெறுகிறார்கள். இந்நிலையில், தற்போது குடிபெயர்ந்து வரும் அகதிகள், பதிவு செய்யப்படாத அகதிகளாக குடியமர்த்தப்படுகிறார்கள்.
பதிவு செய்யப்படாத அகதிகள்!
பதிவு செய்யப்படாத அகதிகள் என்றாலும், அவர்களுக்கான வசதிகளை சிறப்பு ஏற்பாட்டில் தற்போது தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர்களால் பணிக்குச் செல்ல முடியாது. அரசு தரும் உணவை, உதவியை பெற்று மட்டுமே வாழ முடியும். அவ்வாறு வந்த வகையில் இதுவரை 25 குடும்பங்கள், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வேலையில்லை, வாழ்வாதாரம் இல்லை என்கிற காரணத்தால், குடிபெயர்ந்தவர்கள். நேற்று வரை 75 பேராக இருந்த அகதிகள் எண்ணிக்கை, இன்று கூடுதலாக 3 பேர் வந்ததாக, 78 ஆக உயர்ந்துள்ளது.
சுவற்றில் அடித்த பந்தாக திரும்பும் அகதிகள்!
இதுவரை வந்த அகதிகள், ஏற்கனவே இந்தியாவில் அகதியாக இருந்து போர் நிறைவுபெற்றதால், சுய விருப்பத்தின் பேரில் தாய்நாடு இலங்கை திரும்பியவர்கள் என்கிற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அவர்களால், அங்கு வாழவே முடியாத சூழல் ஏற்பட்டதால், வேறு வழியின்றி மீண்டும் அகதிகளாக இந்தியாவிற்கு வரத்தொடங்கியுள்ளனர். இன்னும் பலர், வரவிருப்பதாகவும் தெரிகிறது. குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வரும் அகதிகள், என்ன நோக்கத்திற்காக இலங்கை திரும்பினார்களாே, அது நடைபெறவில்லை என்பதும், அங்கு வாழ்வதே சவாலானது என்பது தெரிந்ததாலும் , இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
அகதியாக இருப்பவே நல்லது!
இது குறித்து. இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதி ஒருவரிடம் பேசிய போது, ‛‛இரண்டு மாதத்திற்கு முன்பு தான், போர் நிறைவு பெற்ற காரணத்திற்காக தாய்நாடு திரும்பினேன். இங்கு அகதியாக இருக்கிறோம்... அங்கு சுதந்திரமாக இருக்கலாம்; சொந்த நாட்டின் பிரஜையாக இருக்கலாம் என்று ஆசையோடு சென்றேன். ஆனால், அங்கு நிலை வேறுமாதிரி இருக்கிறது. முன்பு நாங்கள் இருந்த இலங்கை அல்ல அது. அங்கு மோசமான சூழல் நிலவுகிறது. இங்கு அகதியாக இருந்த போது கிடைத்தவை கூட, அங்கு கிடைக்கவில்லை. எதுவுமே இல்லாமல் சாவதை விட, அகதியாக வாழ்ந்து விடலாம் என்று தான், மீண்டும் திரும்பி இந்தியா வந்துவிட்டேன். இங்கு உணவுக்கு பிரச்சனை இல்லை. உயிர் வாழ உணவு தானே முக்கியம். அதுவே இலங்கையில் இல்லாத போது, அங்கு எப்படி இருக்க முடியும்,’’ என்று கூறினார்.