மதுரையில் அதிர்ச்சி.. திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றக்கோரி இளைஞர் போலீஸ் பூத்தில் தீக்குளித்து தற்கொலை!
திருப்பரங்குன்றம் உச்சியில், தீபம் ஏற்றவில்லை என கூறி இளைஞர் ஒருவர் போலீஸ் பூத்திற்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழப்பு - தல்லாகுளம் காவல்துறை விசாரணை.
பெட்ரோல் ஊற்றிக் கொண்ட இளைஞர்
மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் (40) MBA பட்டாதாரியான இவர். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் ( MEDICAL REF) அவ்வப்போது சிறிய சரக்கு வாகனம் மூலமாக பழங்கள் விற்பனை செய்தும்வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அவுட்போஸ்ட் பெரியார் சிலை அருகே பூர்ணசந்திரன் தான் ஓட்டிவந்த சரக்குவாகனத்தை நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள போலீஸ் பூத்திற்குள் சென்று கதவை பூட்டிய பின்னர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். போலீஸ் பூத்தில் இருந்து அலறல் சத்தத்துடன் தீ பற்றி எரிவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி துணைமேயர் நாகராஜன் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இளைஞர் பூர்ண சந்திரன் வீடியோ வெளியீடு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தபோது போலீஸ் பூத்திருக்குள் இளைஞர் ஒருவர் உடல் முழுவதிலும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் உடலை மீட்பு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என கூறி இளைஞர் பூர்ண சந்திரன் வீடியோ வெளியிட்ட பின்னர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிய நிலையில், தல்லாகுளம் காவல்துறையினர் பூர்ண சந்திரனின் செல்ஃபோனை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் பெரியார் சிலை அருகே திருப்பரங்குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவில்லை என கூறி இளைஞர் ஒருவர் போலீஸ் பூத்திற்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















