மேலும் அறிய
Advertisement
17 வயது சிறுமியின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
கருக்கலைப்புக்கு பின்னர் தடய அறிவியல் சோதனையின் அடிப்படையில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது உறுதியாகும் பட்சத்தில் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 17 வயதான இளம்பெண் ஒருவரின் தாயார், இளம்பெண்ணின் கருக்கலைப்பிற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " 17 வயது நிரம்பிய இளம்பெண், தங்கப்பாண்டி என்பவரால் கருவுற்று, தற்போது ஆறு 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்வதற்காக இளம்பெண் சென்றபோது கரு 20 வாரங்களை கடந்து விட்டதால் கருக்கலைப்பு செய்ய நீதிமன்றத்தின் அனுமதி தேவை என கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்ணும் கருவை கலைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் அந்த இளம் பெண்ணின் கருவை கலைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது இளம்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் 44 வயதுடைய தங்கப்பாண்டி என்பதும், மாணவி தினமும் பயணித்த மினி பேருந்தின் ஓட்டுனர் என்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் இந்த வழக்கின் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை இரண்டு மாதங்களுக்கு உள்ளாக தாக்கல் செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதோடு கருக்கலைப்புக்கு பின்னர் தடய அறிவியல் சோதனையின் அடிப்படையில், மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது உறுதியாகும் பட்சத்தில் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து விசாரித்து மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கடலில் எண்ணெய் கொட்டினால் மாநில பேரிட மேலாண்மை துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - மத்திய அரசு பதில் மனு
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடல் பரப்பில் எண்ணெய் கப்பல்களில் விபத்தோ, கசிவோ ஏற்பட்டால் கடல் பரப்பளவில் அதிளவிலான தூரத்திற்கு எண்ணெய் படலம் ஏற்படுகிறது. இதனால், கடலின் இயற்கை வளம், மீன் வளம் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கின்றன. இது போன்ற விபத்து நேரங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், கடலோர பகுதிகளிலும் உரிய குழு அமைக்க வேண்டுமென தேசிய எண்ணெய் கசிவு தடுப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது கூடி தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை. தற்போது, இலங்கை கொழும்பு பகுதியில் ஒரு கப்பல் தீவிபத்தில் சிக்கியுள்ளது. இதிலிருந்து எண்ணெய் மற்றும் ரசாயன திரவங்கள் கடலில் கசிந்துள்ளன. இவை இந்திய கடல் எல்லைப் பகுதியிலும் பரவியுள்ளது. எனவே, மாநில, மாவட்ட மற்றும் கடலோர பகுதிகளுக்கான எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை உடனடியாக ஏற்படுத்தவும், கொழும்பு கப்பல் விபத்தின் எண்ணெய் கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், கடலில் கப்பல் விபத்துக்குள்ளாகி எண்ணெய் கசிவு ஏற்படும் பொழுது மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் குழு அமைக்கப்பட்டு மாநில அரசின் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடலில் எண்ணெய்க் கசிவு தொடர்பாக மாநில அரசு, பேரிடர் தடுப்பு தேசிய செயல்திட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை குழுவை அமைத்து ஆண்டுதோறும் அதற்கான கூட்டத்தை நடத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள்,
* கடலோரம் இல்லாத மாநிலங்களில் எண்ணெய் கசிவு மாநில பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை
* தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளன. கடலில் ஏற்படும் இது போன்ற விபத்தினால் பாதிக்கப்படப்போவது கடலோர மாநிலங்கள் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் தான்.
* மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு போதுமானதாக இல்லை. ஆகவே, கூடுதல் விவரங்களுடன் முழுமையான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
* மனுதாரர் தரப்பிலும் இது குறித்த கூடுதல் விவரங்களை சேகரித்து நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
* மேலும் தமிழக அரசு தரப்பில் எண்ணெய் கசிவு பேரிடர் தடுப்பு தேசிய செயல் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதா? கூட்டம் நடத்தப்படுகிறதா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 6 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர்
உலகம்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion