அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் துருக்கி செல்ல அனுமதி - லுக் அவுட் நோட்டீஸ் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
துருக்கியில் நடைபெறும் சர்வதேச இதழியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த SP உதயகுமார் இவர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியவர். அணுசக்தி எதிர்ப்பு குழு என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன இதனால் இவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என மத்திய அரசு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இவரது பாஸ்போர்ட் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கி நாட்டில் நடைபெறக்கூடிய இதழியல் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். எனவே அந்நிகழ்விற்கு செல்ல தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன் உதயகுமார் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் வள்ளியூர் நீதிமன்றத்தில் இரண்டு நபர்கள் உத்திரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் அதில் உதயகுமார் நிகழ்ச்சி முடித்து இந்தியா திரும்புவார் என்று உறுதி மொழி கொடுக்க வேண்டும் என்றும். இந்தியா திரும்பியவுடன் இந்திய தூதரகத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் இடைக்கால நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பண்ணைகளில் கோழிகளை எடுக்க காவல்துறை பாதுகாப்பு கோரிய வழக்கு - நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு தலைவர் லட்சுமணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "தமிழ்நாட்டில் ஒப்பந்த முறையில் வளர்ப்பு ஊதியமாக கோழிகளின் எடைகளை கொண்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கோழி குஞ்சுகளை நிறுவனங்களே கொடுக்கின்றனர். மேலும் தீவனங்கள், மருத்துவ வசதிகள், போக்குவரத்து ஆகிய அனைத்தும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றனர். மேலும் 40 நாட்கள் முடிந்த பிறகு கோழிகள் எடுத்துக்கொண்டு பண்ணை உரிமையாளருக்கு ஊதியம் வழங்கப்படும்.
கொரோனா நோய்தொற்று காலங்களில் முட்டைகள், கோழிகள் அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பொழுதும் பண்ணை உரிமையாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக சிலர் பண்ணை உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வளர்ந்த கோழிகளை பண்ணையில் இருந்து எடுத்துச் செல்ல விடாமலும், கோழிக்குஞ்சுகளை பண்ணைகளுக்கு கொண்டு வருவதையும் தடுக்கின்றனர். இதுகுறித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்து பண்ணைகளில் விடப்பட்டுள்ள கோழிகளை எடுக்கவும், குஞ்சுகளை விடவும் தடை இன்றி செயல்பட காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மனுதாரர் மனுவை பரிசீலனை செய்து பிரச்சனைக்குரிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தார்.
வத்தலக்குண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் "சேவல் சண்டை" நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்களது கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வரும் வைகாசி மாதம் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊர் பெரியவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து 26.05.2022 முதல் 28.05.2022 வரை திருவிழா கொண்டாடவும்; திருவிழாவில் பூஜை மற்றும் அபிஷேகத்திற்குப் பிறகு 'சேவல் சண்டை விளையாட்டு' நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை எங்கள் ஊர் மக்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையின்றி அமைதியான முறையில் "சேவல் சண்டை விளையாட்டை" நடத்தி வருகின்றோம். ஆகவே திருவிழாவில் "சேவல் சண்டை" நடத்த அனுமதி கோரி வத்தலகுண்டு காவல் ஆய்வாளரை அணுகி 18.04.2022 அன்று மனு ஒன்றினை அளித்தேன் ஆனால் தற்போது வரை எனது மனுவை பரிசீலித்து எந்த ஒரு பயனுள்ள விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
எனவே திருவிழாவில் "சேவல் சண்டைக்கு" அனுமதியும் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில், மனுதாரரின் மனுவினை வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் நிராகரித்துள்ளார் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.