கள்ளச்சாராய வேட்டை; சிறுமலை அடிவார வனப்பகுதியில் 50 போலீஸ் திடீர் சோதனை
கொடைரோடு அருகே சிறுமலை அடிவார வனப்பகுதியில் இன்று திடீரென 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உற்பத்தி குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கள்ளச்சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிரடி சோதனை செய்ய அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர கமிஷனர்கள் என அனைத்து போலீசாருக்கும் தமிழக உள்துறையில் உத்தரவு பிறப்பிக்கட்டிருக்கிறது.
அதே நேரத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் அனைத்து மாவட்ட போலீசார், ஆணையர்களுக்கு இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள், மது விற்பவர்கள் என ஒருவர் கூட விடாமல் பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். டிஜிபியின் உத்தரவை அடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதிரடி சோதனை நடத்த ஒவ்வொரு மாவட்ட காவல்துறைக்கு உடனடியாக உத்தரவு பிறப்பித்து கண்காணித்து வருகிறார்.
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி வத்தலக்குண்டு போக்குவரத்து ஆய்வாளர் சஜ்ஜிவ்குமார், சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு இன்று காலை நிலக்கோட்டையை அடுத்த சிறுமலை அடிவார பகுதிகளான சடையாண்டிபுரம், இராஜதாணிக்கோட்டை, பள்ளபட்டி, கன்னிமார்நகர் மற்றும் அம்மையநாயக்கனூர், இராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் உற்பத்தி உள்ளதா என திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,
அப்போது சடையாண்டிபுரம் மலைப்பகுதியில் தங்கியிருந்த மலைவாழ் மக்களிடம் மர்மநபர் நடமாட்டம் உள்ளதா, அப்பகுதி மலையின் நீர்நிலைகள் மற்றும் மலைவழித்தடங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் மேற்குறிப்பிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் போதை பொருட்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர்.