மேலும் அறிய
Keezhadi Excavation: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணி, தொல்லியல் துறை விறுவிறு !
நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமையும் பட்சத்தில் உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் கீழடி வருகை தருவார்கள்.

கீழடி
Source : whats app
பிரம்மாண்டமாக அமைய உள்ள திறந்த வெளி அருங்காட்சியக பணிகளில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொல்லியல் அகழாய்வுப் பணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024 - 2025ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணி, தொல்லியல் துறை விறுவிறு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கீழடியில் 2015முதல் வைகை நதிக்கரை நாகரீகத்தை கண்டறியும் பொருட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறை பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடி அகழாய்வில் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான நாகரீகம் கண்டறியப்பட்டது. 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு, கால்நடை வளர்ப்பு, நெசவு தொழில், கட்டுமான தொழில் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன. தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்த உறைகிணறுகள், சுடுமண் பானைகள், சுருள் வடிவ குழாய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளனர்.
திறந்த வெளி அருங்காட்சியக பணிகள்
இரும்பு ஆயுதங்கள் தயாரிக்க உலைகலன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளனர். தொல்லியல் துறை அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை முதல்வர் ஸ்டாலின் 17கோடியே 44 லட்ச ரூபாய் செலவில் தொடங்கி வைத்தார். கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய்குமார் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், தொழிலாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் அகழாய்வு நடந்த இடங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்
முதல் கட்டமாக தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும், அதன்பின் ஒன்றிய தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர். நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமையும் பட்சத்தில் உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் கீழடி வருகை தருவார்கள், பிரம்மாண்டமாக அமைய உள்ள திறந்த வெளி அருங்காட்சியக பணிகளில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement