கண்டதேவி கோயில் தேரோட்டம் ; சிவகங்கையில் ஏ.டி.ஜி.பி அருண் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் !
தேரோட்ட நாளன்று 2,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வருகிற 21-ம் தேதி உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ள, கண்டதேவி தேரோட்டம் குறித்தான ஆலோசனைக் கூட்டம். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஏ.டி.ஜி.பி அருண் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பிரபலமான கண்டதேவி தேரோட்டம்
Kandadevi Temple : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர். இந்த சூழலில் 2006-ம் ஆண்டு பழமையின் காரணமாக தேர் பழுதாகி தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மகாதேவன் என்பவர் தேரோட்டத்தை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தேரோட்டத்தை நடத்துவதில் என்ன பிரச்னை? துணை ராணுவத்தை கொண்டு நானே தேரோட்டத்தை ஓடச் செய்யவா? எனக் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் தேரோட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறக்கப்பட்டது.
கண்டதேவி தேரோட்டத்தில் கடும் பாதுகாப்பு
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தற்போது ஜூன் 13-ம் தேதி கோயில் திருவிழாவிற்கென காப்புக்கட்டப்பட்ட நிலையில், வருகிற 21-ம் தேதி சிறப்பு தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த தேரோட்டம் சம்பந்தமாக சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித், ஏ.டி.ஜி.பி அருண், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் டி.ஐ.ஜி கண்ணன், ஐ.ஜி துரை, மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த், சிவகங்கை எஸ்.பி டோங்க்ரே உமேஷ் பிரவின், மற்றும் வருவாய்த்துறையினர், அறநிலையத்துறையினர், தேவஸ்தானம் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். தேரோட்ட நாளன்று 2,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மக்களே உஷார்! கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 800 ஆம்னி பேருந்துகள்! பயணிகளை எச்சரிக்கும் தமிழக அரசு