கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
"திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது"

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி (03-12-2025) கார்த்திகை தீபம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. நினைத்தாலே முக்தி தரும், திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குவதால், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் நாள் அன்று, ஏராளமான பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு என்ன ?
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், கார்த்திகை மாதம் மகா தீப திருநாள், டிசம்பர் மூன்றாம் நாள் (03-12-2025) புதன்கிழமை நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் (தேர்வுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் அனைத்து அலுவலர்களும் மற்றும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் மாதம் 13-ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிவிக்கப்பட்ட உள்ளூர் தினம் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 கீழ் வரும் பொது விடுமுறை இல்லை என்பதால், டிசம்பர் மூன்றாம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.






















