’ராமநாதபுரம் தண்ணியில்லா காடா?’ இல்லவே இல்லை என அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள்..!
’எங்க ராமநாதபுரம் தண்ணியில்லா காடு இல்ல, பலருக்கு தண்ணிக் கொடுத்து தாகத்த தணிச்ச நெல் விளைந்த பூமி’ என பெருமிதம் கொள்கிறார்கள் ராம்நாட்டு காரர்கள்..!
'நீ துப்புற இந்த எச்சிய ராமநாதபுரம் மாவட்டம் பக்கம் திருப்பி விட்டா முப்போகம் விளையுமேடான்னு' சினிமாவுல கூட எங்க மாவட்டத்த கலாச்சிருந்தாங்க, ஆனா இனிமேல் யாரும் அப்டி சொல்லக்கூடாது.!
ராமநாதபுரத்திற்கு முகவை எனும் பெயர் வந்ததன் காரணம் :
வறட்சி மாவட்டம் என பொதுவாக அழைக்கப்படும் ராமநாதபுரம், மன்னர்கள் காலத்தில் நெற்களஞ்சியமாக திகழ்ந்துள்ளது. முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால் ராமநாதபுரத்திற்கு ’முகவை’ என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு தெரிவிக்கிறார்.
'சங்க இலக்கியங்களில் முகவை'
புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருளை பேரகரமுதலி குறிப்பிடுகிறது. மேலும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும். எனவே முகவை என்ற சொல்லை நெல்லுடன் தொடர்புடையதாகவும், நெல் கதிரடிக்கும் இடத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
'நெல்லைக் குறிக்கும் ஊர்கள்'
ராமநாதபுரம் எனும் ஊர் உருவாவதற்கு முன்பு இப்பகுதி நெல் கதிரடிக்கும் பொட்டலாக இருந்துள்ளதால் முகவை என பெயர் ஏற்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் பல உள்ளன. சமீபகாலம் வரை ராமநாதபுரம் பெரிய கண்மாய் மூலம் இப்பகுதிகளில் அதிக அளவில் நெல் விளைச்சல் இருந்துள்ளது. ராமநாதபுரத்தைச் சுற்றிலும் நெல்லை நினைவுபடுத்தும் சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை, களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் ஆகிய ஊர்கள் உள்ளன. இதில் மூன்று ஊர்கள் கோட்டை என முடிகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அவை பாரம்பரிய நெல்லின் பெயரில் அமைந்த நெல் விளையும் கோட்டைகளாக இருந்துள்ளன. எனவே சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை ஆகிய ஊர்கள் நெல்லால் தான் இப்பெயர் பெற்றுள்ளன என அறிய முடிகிறது. அதேபோல் களத்தாவூர், அச்சுந்தன்வயல், நொச்சிவயல் ஆகிய ஊர்களும் நெல்லைக் குறிக்கும் பெயரில் தான் அமைந்துள்ளன. அக்காலகட்டத்தில் சுற்றியுள்ள இவ்வூர்களில் விளைந்த நெல்லை, கதிரடிக்கும் மையமாக இருந்த பொட்டல் பகுதி (தற்போதைய ராமநாதபுரம் நகரம்) முகவை என அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராஜா கிழவன் சேதுபதி காலத்தில் இப்பகுதியில் தோண்டப்பட்ட ஊருணி முகவை ஊருணி என்றே அழைக்கப்படுகிறது. கி.பி.1711-ம் ஆண்டு அவர் வழங்கிய செப்பேட்டில் ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் இருக்குமிடமும் முகவை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
'ராமநாதபுரம்'
கி.பி.1601-ல் சேதுபதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ராமநாதபுரம் என்னும் ஊர் இருந்துள்ளது. கி.பி.1607-ல் திருமலை உடையான் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் ராமநாதபுரம் எனும் ஊர் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. அப்போது சேதுபதிகளின் தலைநகரம் போகலூர் என்பது கவனிக்கத்தக்கது. ராமநாதபுரம் நகரம் உருவாவதற்கு முன், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில், களத்தாவூர், அச்சுந்தன்வயல், சூரங்கோட்டை ஆகிய ஊர்கள் சிறப்புற்று இருந்துள்ளன. எனவே சேதுபதிகளுக்கு முன்பே விஜயநகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிகாலத்தில், முகவைப் பகுதியில், ஊர் உருவாக்கப்பட்டபோது ராமநாதபுரம் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என கூறுகிறார். தற்போது வறட்சி மாவட்டம் என அழைக்கப்படும் ராமநாதபுரம் முற்காலத்தில் நெற்களஞ்சியமாக விளங்கியது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
'இந்த விஷயம் இவ்வளவு நாளா எங்களுக்கு தெரியாம போச்சே' எல்லா மாவட்டத்துக்காரங்களும் எங்களை தண்ணியில்லா காடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க' ஒரு அதிகாரியை மாற்றம் செய்தாலும் தண்ணியில்லாக்காடு ராமநாதபுரத்துக்கு மாத்திருவோம்னு ஒரு பேச்சே வழக்கத்தில இருக்கு, அது மட்டுமா, ஒரு சினிமா படத்துல நடிகர் விவேக்கு நகைச்சுவை காட்சியில, 'நீ துப்புற இந்த எச்சிய ராமநாதபுரம் மாவட்டம் பக்கம் திருப்பி விட்டா முப்போகம் விளையுமேடான்னு' சினிமாவுல கூட எங்க மாவட்டத்த கலாச்சிருந்தாங்க, ஆனா இனிமேல் யாரும் தண்ணியில்லாக்காடுன்னு சொல்லக்கூடாதுன்னு கராறா சொல்றாங்க'. அந்த மாவட்டத்து மக்கள்.