"200 தொகுதியை கைப்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறுவது பகல் கனவு" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் மக்கள் ஒருபோதும் அதிமுகவை கைவிட மாட்டார்கள்
சட்டமன்றத்தில் 200 தொகுதி கைப்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறுவது பகல் கனவு. 2026 ஆண்டில் எடப்பாடியார் தனிப் பெருபான்மையுடன் ஆட்சி அமைப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது பேட்டியில், “2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம், அதிமுக தொகுதியை கூட வெல்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் மக்கள் தி.மு.கவுக்கு அது போன்ற ஒரு ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. கடந்த 2019 ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 33 சதவீதம் வாக்கு வங்கி பெற்றது என்று சொன்னால், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் 26 சதவீதம் பெற்றுள்ளது. அதிமுக கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அதிமுக பெற்றுள்ளது. அதேபோல் பிஜேபி 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று திமுகவிற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த தேர்தலிலே திமுக எண்ணிக்கை தொட்டு இருக்கலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது என்பது இந்த புள்ளி விவரங்கள் நமக்கு துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.
தேர்தல் வியூகம்
எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அதிமுக தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தில் வளர்ச்சி பாதை கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடியார் செயல்படுத்துவார். தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். 52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும், என்று திமுக உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடியார் வழிநடத்தி வருகின்றார். எடப்பாடியாரை 2026ல் முதலமைச்சராக அமர்த்துவது தான் 2 கோடி தொண்டர்களுடைய லட்சியமாக இருக்கிறது மக்களும் அப்படித்தான் தீர்மானமாக முடிவெடுத்து இருக்கின்றார்கள்.
அழைப்பிற்கு கொடுத்த விரிவான விளக்கம்
எங்களை பொறுத்த வரை சட்டமன்ற தேர்தலில் எப்போது தேர்தல் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியிலே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிற, மக்களால் வரவேற்கப்படுகிற, மக்கள் எதிர்பார்க்கிற முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியாரை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு அமைக்கக்கூடிய வாய்ப்புகளை இந்த தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள். புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கத்தை, புரட்சித்தலைவி அம்மா வளர்த்த இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு பல சக்திகள் எந்த முயற்சி எடுத்தாலும் அதிமுகவை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். 21 சதவீத வாக்குகளை பெற்று எடப்பாடியாரின் தலைமையில் கழகம் சிறப்பாக உள்ளது என்று நிரூபித்து காட்டி உள்ளார். சிலர் அழைப்பு கொடுத்ததற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அந்த விளக்குமே அவங்கள் கொடுத்த அழைப்புக்கு போதுமான பதிலாக இன்றைக்கு பார்க்கப்படுகிறது அதுதான் கட்சியினுடைய கருத்தாகும்” என்று கூறினார்.