தொடர் மழையால் திண்டுக்கலில் எகிறிய பூக்கள் விலை - ஒரு கிலோ மல்லி 1,500க்கு விற்பனை
’’மலர் விலையேற்றத்தால் மலர் வியாபாரிகள் கவலை அடைந்துள்ள நிலையில் அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி’’
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உட்பட பல இடங்களில் பூக்கள் விளைகிறது. பூக்களுக்கு காலம் என்பது இங்கு இல்லை. அனைத்து மாதங்களிலும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பூக்களிலே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு நல்ல மழை பெய்து பூக்கள் விளைச்சல் நன்றாக உள்ளது .குறிப்பாக செண்டுமல்லி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, மல்லிகை, கனகாம்பரம், பிச்சிப்பூ, முல்லைப்பூ, காக்கரட்டான், ஜாதிமல்லி, ரோஜா, மருது, அரளிப்பூ ஆகிய பூக்கள் விளைச்சல் அதிகமாகத்தான் உள்ளது. மல்லிகைப்பூ 1500க்கு விற்கப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. தொடர் மழையால் பூக்கள் அனைத்தும் உதிர்ந்து பல இடங்களில் செடிகளில் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.
அதே நேரத்தில் எப்போதும் 1000 ரூபாயை தாண்டாத மல்லிகைப்பூ கிலோ 1500 ரூபாய்க்கு விற்கப்படுவதால் வியாபாரிகள் வாங்க முடியாமல் தவித்தனர். மல்லிகை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை விடும் வரை இந்த நிலைமை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மலர் சந்தையில் விற்பனையாகும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:
- மல்லிகை - 1500
- முல்லை - 700
- கனகாம்பரம் - 1000
- ஜாதி மல்லி - 400
- செவ்வந்தி - 100
- சம்பங்கி - 120
- அரலி - 120
- கோழி கொண்டை -50
- செண்டு மல்லி - 80/100
- ரோஜா - 150
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்