அரசு கட்டிடங்கள் கட்டும்போது அரசியல்வாதிகளின் அழுத்தம் உள்ளது - முன்னாள் எம்எல்ஏ பால பாரதி
அரசு கட்டிடங்கள் கட்டும்போது அரசியல்வாதிகளின் அழுத்தம் உள்ளதாகவும் அதை உடனடியாக தமிழக முதல்வர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பால பாரதி முன்னாள் எம்எல்ஏ (திண்டுக்கல்)
கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிட கட்டுமான பணியில் ஈடுபட்டபோது கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், கம்பம் அரசு மருத்துவமனை முன்பு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூபாய் 10 கோடி செலவில் பல்வேறு மருத்துவ வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழந்தை கண்காணிப்பு மையம் (சீமாங் சென்டர்) விரிவாக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீத பணிகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று முந்தினம் கட்டிடத்தில் பூச்சு வேலையின்போது, முதல் மாடியின் எலிவேஷன் சிலாப் இடிந்து விழுந்ததில், பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்ற தொழிலாளி கட்டட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
மேலும் இரு தொழிலாளர்கள் முனீஸ், ரத்தினவேல் ஆகியோர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை, கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், கட்டிட இடிபாடில் சிக்கி தொழிலாளி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தும், தரமற்ற வேலை செய்த ஒப்பந்ததாரரை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பத்திரிகையாளரிடம் கூறுகையில், கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் விழுந்து தொழிலாளி உயிர்பலி ஏற்பட்டதில், அரசு இக்கட்டத்தின் தரத்தை உறுதி செய்யாது சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பில்லாமல் தரமற்ற பணி செய்து அரசை ஏமாற்றும் ஒப்பந்ததாரரை கைது செய்து கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் குழு அமைத்து கட்டிடத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் சம்பவத்தில் பலியான தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உடல் பாதிப்பு அடைந்த இரண்டு தொழிலாளிகளுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் அரசு கட்டிடங்கள் கட்டும்போது அரசியல்வாதிகளில் அழுத்தம் உள்ளதாகவும் அதை உடனடியாக தமிழக முதல்வர்கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விவசாய விடுதலை முன்னணி, மக்கள் அதிகாரம், ஐந்து மாவட்ட விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.