’நில அபகரிப்பை கண்டுகொள்ளாத ஆட்சியர்'... மனமுடைந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி
நிலத்தை அபகரித்தது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் 70 வயது முதியவர் அமல்ராஜ், இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். இச்சுவரை அகற்றி நிலத்தை மீட்டுத்தரக்கோரி பலமுறை ஆட்சியரிடமும் பிற அதிகாரிகளிடமும் தொடர்ந்து மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஆட்சியர் கட்டிட வளாகம் வந்த முதியவர் அமல்ராஜ், தனது நிலத்தை மீட்க அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். நேற்று இரவு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மயங்கி கிடந்த அமல்ராஜை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலாடி தாலுகா சிக்கல் பகுதியை சேர்ந்த இவர், தனது சொந்த நிலத்தை சிலர் ஆக்ரமித்தது தொடர்பாக, தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடலாடி வட்டாட்சியரிடம் முதலில் மனு கொடுத்துள்ளார். ஆனால், பலமுறை அலைந்தும் கடலாடி தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அலைந்து மனமுடைந்த முதியவர் அமல்ராஜ், வாரந்தோறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து மூன்று நான்கு வாரங்களாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் அதிகாரிகளிடமும் நியாயம் கேட்டு நீதி கேட்டும் மனுக்கொடுத்து தள்ளாத வயதில் நடையாய் நடந்துள்ளார். புகார் மனுவை வாங்கிக் கொள்ளும் ஆட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் நீங்கள் போகலாம் என கூறி மற்றும் வந்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டதாக தெரியவில்லை.
அரசு அதிகாரிகள் யாரும் தனக்கு உதவிக்கரம் நீட்ட முன்வராததால், நேற்று காலை ஆட்சியர் அலுவலத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வந்தவர், விரக்தியடைந்து மனம் வெறுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே ல் தான் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டார். இந்த நிலையில்தான் மாலை வேளையில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ரோந்து சென்ற காவலர்கள் அவரை மீட்டுள்ளனர்.தற்போது அவர் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
தனது நிலத்தை மீட்க அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் பயனில்லாததால், மனமுடைந்த முதியவர் ஒருவர் ஆட்சியரக வளாகத்திற்குள் 70 வயது முதியவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 70 வயது முதியவரின் அபயக்குரல் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எட்டுமா என, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.