1,008 தட்டுகள் உட்பட சீர்வரிசைகளை குவித்த தாய்மாமன்.. அசந்த ஊர் மக்கள்..!
1,008 தட்டுகள் சீர்வரிசையுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு காளையுடன் குதிரை பூட்டப்பட்ட சாரட்டில் ஊர்வலமாக அழைத்து வந்து அசத்தல்.
திண்டுக்கல்லில் காது குத்து விழாவில் தாய் மாமன் 10 மாட்டு வண்டி,10 டிராக்டர்களில் 1,008 தட்டுகள் சீர்வரிசையுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஜல்லிக்கட்டு காளையுடன் குதிரை பூட்டப்பட்ட சாரட்டில் ஊர்வலமாக அழைத்து வந்து அசத்தியுள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரியமான தென் மாவட்டத்தின் உயிர் மூச்சு என்று சொல்லப்படும் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தனது அக்கா குழந்தைகள், தங்கச்சி குழந்தைகளுக்கு எந்த விசேஷங்கள் என்றாலும் தாய்மாமன் தன்னால் முடிந்த அளவு அனைவரையும் வியக்க வைக்க வகையிலும் நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் எனக் கூறி விழாக்களில் செய்முறைகளோடு வந்து நிற்பது வழக்கம் அதேபோல் தாய்மாமனுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படும்.
தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி காது குத்து விழாவில் தாய்மான்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். தனது கௌரவத்தை காட்டும் வகையில் தாய் மாமன்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளின் மகன், மகள் காது குத்து விழாவில் சிறப்பாக சீர் வரிசை செய்வது என்பது பாரம்பரிய முறையாகும். அதன்படி திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர் சந்தோஷ். இவரது மகன் யுவன் ஸ்ரீஹரி, இவரது காது குத்து விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக 10 மாட்டு வண்டிகள், 10 டிராக்டர்களில் ஒரு வருடத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள், அரிசி மூட்டைகள், இனிப்பு வகைகள், காய்கறிகள், வாழைப்பழம் பலாப்பழம் என பல வகையான பழ வகைகள், புத்தாடைகள், பணம், தங்கநகைகள் போன்றவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டங்கள் நடைபெற்றது, மேலும் ஊர்வலத்தில் பொன் முத்துராமலிங்க தேவர், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல், வடிவேல் ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.
மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஆட்டுக்கிடா கொண்டு வரப்பட்டது. தப்பாட்டம், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சீர்வரிசைகள் கொண்டு வரப்பட்டன. ஊர்வலம் பின்னே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மருமகன் யுவன் ஸ்ரீஹரியை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதுகுறித்து தாய்மாமன் முத்துக்குமார் கூறுகையில், தாய்மாமன் உறவு என்பது எதற்கும் ஈடு இணை இல்லாதது அதன் காரணமாகவே பாரம்பரிய முறைப்படி 1008 சீர் தட்டுகளுடன் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் சீராக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.





















