வரதட்சணை கொடுமையால் தந்தை தற்கொலை; இளம்பெண் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
வரதட்சணை கொடுமையின் காரணமாக தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக இளம் பெண் உறவினர்களுடன் வந்து திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகள் இந்துமதி. பிஏ தமிழ் இலக்கியம் பட்டதாரியான இவருக்கும் செட்டி நாயக்கன்பட்டி நாகப்பா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் குமரவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி 50 பவுன் வரதட்சணையாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு மூன்று பவுன் நகையும் பெண்ணுக்கு 20 பவுன் நகையும் பண்ட பாத்திரங்களும் ரொக்கமாக ரூபாய் மூன்று லட்சமும் கொடுத்துத் திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான பிறகு கணவர் குமரவேல் சென்னையிலும் மனைவி இந்துமதி செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 20 பவுன் நகையும் ரூ.5 லட்சம் ரொக்க பணமும் கொடுத்தால்தான் உன்னுடன் குடும்பம் நடத்த முடியும் இல்லை என்றால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியதோடு மட்டுமல்லாமல் மாமியார் வீட்டில் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக இந்துமதி தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இந்துமதியின் தந்தை காளியப்பன் கணவர் குமரவேலின் குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றபொழுது அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மன வேதனை அடைந்த இந்துமதியின் தந்தை காளியப்பன் டிசம்பர் ஆறாம் தேதி டிசம்பர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 7ஆம் தேதி இறந்து போனார். இந்துமதியின் தந்தை இறப்பதற்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை குற்றவியல் நடுவர் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது. காளியப்பன் இறுதி சடங்குகள் நிறைவுற்ற நிலையில் இந்துமதியும் அவரது உறவினர்களும் நியாயம் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தனர்.
புகாரில் இந்துமதியின் கணவர் குமரவேல், மாமனார் நாகராஜன், மாமியார் மகாலட்சுமி, பெரிய மாமனார் சேதுராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துமதி தனது மனுவில் கூறியிருந்தார். செய்தியாளர்களிடம் கூறிய இந்துமதி, தனது கணவர் குமரவேல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பொய்யாக கூறி தன்னை திருமணம் செய்ததாகவும் வரதட்சணை கொடுமை செய்து தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறினார். இது தொடர்பாக வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதே போல் வெறியோடு காவல் நிலையம் மற்றும் தாடிக்கொம்பு காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று வேதனையுடன் தெரிவித்தார்.