பழனியில் 200 ஆண்டுகள் பழமையான கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் கண்டுபிடிப்பு
பத்திரத்தில் உள்ள 23 மானேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது.
பழனியில் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் ஆவணம் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் ஒன்றை என்னிடம் கொடுத்து அதைப் படித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டினார். கணியர் ஞானசேகரன் உதவியோடு அதை ஆய்வு செய்த போது அந்த ஆவணம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாள் என்பதும் அதை பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா எழுதி இருப்பதும் தெரிய வந்தது. இந்த முத்திரைத்தாள் 10.5 × 16.5 செ.மீ அளவில் உள்ளது. இந்த ஆவணம் பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு இறுதியில் அவருடைய கைஒப்பம் இடப்பட்டுள்ளது.
ஆவணம் மொத்தம் 31 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. தனது ஜமீன் பண்ணையின் 23 ஏஜெண்டுகள் பெயர்களை எழுதி அதை மேனேஜர்கள் விபரப் பத்திரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் பதிந்து வைத்திருக்கிறார். இந்த விபரப் பத்திரம் ஈஸ்வர ஆண்டு மாசிமாதம் 9 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. இது 1818 பிப்ரவரி 21 ஆம் தேதி ஆகும். ஒரு கடினமான தாளில் இந்தப் பத்திரம் உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டவடிவமான கட்டண முத்திரையானது, பத்திரத்தாளின் இடது மேல் புறம் "இன்டாக்ளியோ" எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று தமிழ் (இரண்டணா) ஆங்கிலம்(Two Anna) உருது (தோஅணா) தெலுங்கு (இரடுஅணா) மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. மேல்வலது புறத்தில் கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் பொக்கிசம் என்று தமிழ், டிரசரி (Treasury) என்று ஆங்கிலம், கஜானா என்று உருது, பொக்கிசமு என்று தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது. பத்திரத்தில் உள்ள 23 மானேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது. 10 வகையான சாதியைச் சேர்ந்த மேனேஜர்கள் பெயர்கள் அதில் உள்ளன. மேனேஜர்களில் முதலில் கட்டைய கவுண்டன் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சாயபு, சாம்பான், குடும்பன், தேவன், ராவுத்தன், செட்டி, நாயக்கன், பிள்ளை, அய்யன் என்று பெயர்களுக்குப் பின்னால் சாதிகள் குறிக்கப்படுகின்றன.
இதில் வியப்புக்குரிய விசயம் என்னவென்றால் தற்போது நிலவும் சாதிப் பாகுபாடுகளையும் ஏற்ற தாழ்வுகளையும் இந்தப் பெயர் வரிசையில் காணமுடியவில்லை. அதாவது உயர்த்தப்பட்ட சாதிகள் என்று கருதப்படும் சாதிகள் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பின் வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. எனவே சாதிக் கொடுமைகள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் பாகுபாடுகள் இல்லாமலும் சாதிகளின் படிநிலையைக் கருத்தில் கொள்ளாமலும் ஜமீன் மேனேசர்களின் விபரப் பத்திரம் தயாரிக்கப்பட்டது தெரிய வருகிறது.
இந்தப் பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவரான ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் பிடிக்கப்பட்டு சென்னையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் மனைவியான சின்னோபளம்மா கம்பெனியாரால் பெயரளவுக்கு ஜமீன்தாரினி ஆக்கப்பட்டார். ஜமீனின் உண்மையான ஆட்சி அதிகாரம் கம்பெனியிடம் மாறியது. சின்னோபளம்மா கம்பெனியிடம் இருந்து மாதா மாதம் 30 பொன் வராகன் சம்பளமாகப் பெற்றார். பிற்பாடு சின்னோபளம்மா இறந்தபிறகு கம்பெனியின் வாரிசில்லா சட்டம்(Doctorine of Lapse) மூலம் பாலசமுத்திரம் ஜமீன் நேரடியாக கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது. சின்னோபளம்மா பெயரளவுக்கான ஜமீன்தாரினியாக இருந்த காரணத்தாலும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முழு அதிகாரமும் பால சமுத்திரம் ஜமீன் மீது இருந்ததாலும் இவ்வாறான சாதிப்பாகுபாடுகள் அற்ற ஜமீன் பண்ணை மானேசர்களின் பத்திரம் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.