மதுபோதையில் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக 9 இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களை நள்ளிரவில் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வந்த நிலையில் இதற்கு முன்பாக ஏழு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டது இன்றைய தினம் அதிகாலை எரியோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மாலைகோயில் தெருவை சேர்ந்த சேகர்(52) என்பவரின் இரு சக்கர வாகனமும் சந்தைகளில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்யும் துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கோபால்(50)என்பவரின் இரு சக்கர வாகனமும் எரிக்கப்பட்டது. இன்றைய தினம் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கார்த்திக், பன் வியாபாரி முருகன், எரியோடு வேன்டிரைவர் ராஜா, தென்னம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரராஜன், எரியோடு நடுத்தெருவை சேர்ந்த வியாபாரி சின்ராஜ், பாண்டியன்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், எரியோடு வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் ஆகியோரின் மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டன.
இது போன்ற சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பது போலீசாருக்கும் பெரும்சவாலாக இருந்து வருகிறது. மர்ம நபரை பிடிப்பதற்கு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகவில்லை. இந்த நிலையில் இதுவரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாத மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் பதிவாகி இருந்தது. எரியோடு துரைச்சாமி நாடார் தெரு, மாலைக்கோவில் தெருவில் இருந்து கரூர் சாலைக்கு மர்ம நபர் நள்ளிரவில் நடந்து செல்லும் உருவம் பதிவாகி இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் அந்த நபர், எரியோடு மாலைகோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தச்சுதொழிலாளியான அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது தச்சு வேலை மூலம் கிடைத்த பணத்தில் மதுபானம் குடித்து விட்டு, போதை தலைக்கு ஏறியதும் நள்ளிரவில் தனது கண்ணில் தென்படுகிற மோட்டார் சைக்கிள்கள் மீது தீ வைத்து அவர் எரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். எரியோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 9 இரண்டு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தவரை போலிசார் பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்