கொடை ரோட்டில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் - தப்பி ஓடிய திருப்பதிக்கு போலீஸ் வலைவீச்சு
கொடை ரோட்டில் மொபைல் கார் கள்ள நோட்டு கும்பல் சிக்கியது. கள்ள நோட்டுகள் பறிமுதல் பெண் உட்பட 5 பேர் கைது போலீஸ் பிடியிலிருந்து முக்கிய நபர் தப்பி ஓட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் வாகன சோதனையின் போது, மொபைல் காரில் கள்ள நோட்டு கும்பல் சிக்கியது. அவர்களிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டு அடிக்கும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய பெண் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய நபர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடைரோடு அருகே திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலை நாகைய கவுண்டன்பட்டி பிரிவு என்ற இடத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது சந்தேகம் கொண்ட அம்மைய நாயக்கனூர் ரோந்து போலீசார், வேனில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவிக்கவே சந்தேகம் கொண்ட போலீசார் வேனை சோதனையிட்டனர். அப்போது வேனில் கலர் ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
இதனை அடுத்து வேனில் பயணம் செய்த பெண் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு திண்டுக்கல், மதுரை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல் என விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வேனில் இருந்த கலர் ஜெராக்ஸ் மிஷின் மற்றும் கள்ள நோட்டு அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் பேப்பர் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வேனில் வைத்திருந்த ரூபாய் 26 ஆயிரம் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த திருச்செங்கோடு ரவி, விருதுநகரைச் சேர்ந்த அழகர் மற்றும் வீரமணி மதுரையைச் சேர்ந்த சுகிர்தராஜ் மற்றும் ஜெனிதா ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
மொபைல் வேனில் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கள்ள நோட்டு கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் தீயணைப்பு வீரர் திருப்பதியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருப்பதி எதிர்பாராதவிதமாக போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடிய திருப்பதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பிடியிலிருந்த தப்பியோடிய திருப்பதி உட்பட கைது செய்யப்பட்ட மற்ற ஐந்து பேர் மீதும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிப்பறிக் கொள்ளையிலிருந்து தற்போது கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தை விடும் இந்த கும்பலின் நெட்வொர்க்கை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.