திண்டுக்கல்: பக்ரீத் பண்டிகை எதிரொலி; அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகவும், அடுத்த வாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இது, திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக விளங்குகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்று, வீட்டில் வைத்து வளர்த்து, பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் நேற்று அய்யலூரில் கூடிய ஆட்டுச்சந்தை களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும், சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்.
வெள்ளாடுகளைவிட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.7 ஆயிரத்துக்கும், செம்மறி ஆடு ரூ.7 ஆயிரத்து 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகவும், அடுத்த வாரம் நடைபெறும் சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர். ஆடுகள் விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறுகையில், சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்த கால்நடைகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்