Dindigul: வேதியியல் பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்... பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ மாம்பழங்கள்..!
பழக்கடைகளில் வேதியியல் பொருள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 400 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், பழனி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. இங்கு விளையும் மாங்காய்களை மொத்தமாக குடோன்களில் பழுக்க வைத்து, பிற மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சந்தைகள், மார்க்கெட்டுகள், பழக்கடைகளில் மாம்பழம் விற்பனை களைகட்டி வருகின்றன.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாம்பழ குடோன்களில் சோதனை நடத்தும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், சரவணக்குமார் ஆகியோர் திண்டுக்கல்லில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.திண்டுக்கல் பஸ் நிலையத்தை சுற்றிலும் செயல்படும் 10 மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
Crime: அரசுக்கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை கைது செய்து உள்ளே தள்ளிய போலீஸ்..!
அதில் 2 குடோன்களில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்ததை கண்டுபிடித்தனர். மேலும் 3 குடோன்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 குடோன்களில் இருந்து 300 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த 5 குடோன்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மாம்பழங்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கக்கூடாது. கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்