கம்பம் நகர்மன்ற திமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: தோல்வி! பின்னணியில் நடந்தது என்ன?
திமுக தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. போதியளவு கவுன்சிலர்கள் வருகை இல்லாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தாக ஆணையர் அறிவிப்பு.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் திமுக 24, அதிமுக 7 மற்றும் இதரர் 2 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வனிதா நெப்போலியன், சுனேதா செல்வக்குமார் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் முறையான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறுவதில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நகர்மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விரோதப் போக்கில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் சுனேதா செல்வக்குமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்த வேண்டும் என திமுகவைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் என 22 பேர் கடந்த மாதம் நகராட்சி ஆணையர், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் இன்று அக்டோபர் 9 ஆம் தேதியன்று திமுகவைச் சேர்ந்த கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனேதா செல்வக்குமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றது. இதையொட்டி உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.
கம்பம் நகராட்சி கூட்டரங்கில் ஆணையர் உமாசங்கர் தலைமையில், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் சையது அகமது முன்னிலையில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு திமுக கவுன்சிலர்கள் 15, அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் ஒருவர் என 19 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் நம்பிக்கை தீர்மானத்திற்கு கோரம் இல்லாததால் தலைவர், துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தாக ஆணையர் உமாசங்கர் தெரிவித்தார். அதாவது மொத்தமுள்ள 33 வார்டு உறுப்பினர்களில் நம்பிக்கை தீர்மானத்திற்கு 5க்கு 4 என்ற விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது 27 உறுப்பினர்கள் வருகைப் பதிவு இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 19 பேர் மட்டும் பங்கேற்றதால் தோல்வி அடைந்தது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலர்களை தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்க விடாமல் நகர்மன்ற தலைவர் தரப்பினர் முறைகேடு செய்து இன்றைய வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தோல்வியடைந்திருப்பதாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த கவுன்சிலர்கள் தெரிவித்தனர்






















