திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் கணவர், கர்ப்பிணி உயிரிழப்பு; வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பின் நடந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி திரும்பிய போது கர்ப்பிணி மற்றும் கணவர் உயிரிழந்த சோகம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த பெத்தன் மகன் சுரேஷ் (32). இவரது மனைவி காளீஸ்வரி (27). இந்த தம்பதியினருக்கு பவித்ராஸ்ரீ (3) என்ற பெண் குழந்தை உள்ளது. சுரேஷ், திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் அவர் தனது மனைவி, மகளுடன் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான காளீஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதற்காக சுரேஷ், தனது மனைவி, மகளுடன் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.
DIG Vijayakumar: கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை காரணம் இதுவா? - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்..!
வளைகாப்பு முடிந்ததை அடுத்து நேற்று சுரேஷ், தனது மனைவி, மகளை தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்களுக்கு பின்னால் உறவினர்கள் ஒரு வேனில் வந்துக்கொண்டிருந்தனர். ரெட்டியார்சத்திரம் அருகே கதிரனம்பட்டி பகுதியில், திண்டுக்கல்-பழனி சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுரேஷ், தனது மகளை உறவினர்கள் வரும் வேனில் ஏற்ற முடிவு செய்தார். இதற்காக சாலையில் தனது வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து காளீஸ்வரி இரண்டு சக்கர வாகனத்திலிருந்து தனது குழந்தையை இறக்கிவிட்டு, தானும் இறங்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து சுரேசும், அவரது மனைவி காளீஸ்வரியும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், படுகாயம் அடைந்த கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது குழந்தை காயத்துடன் உயிர்தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த சுரேஷ், மற்றும் அவரது மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது குழந்தை பவித்ராஸ்ரீ சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே!
விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரில் 7 பேர் வந்தனர். அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் திருச்செந்தூர் சென்றுவிட்டு, திண்டுக்கல் வழியாக தாராபுரம் சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் டிரைவரான தாராபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி, அவரது கர்ப்பிணி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்