மேலும் அறிய
Advertisement
பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பழைய வாகனங்கள் ஏல வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு
வழக்கு குறித்து முறையான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான சாலை அமைக்க பயன்படுத்தப்படும் பழைய ரோடு ரோலர், லாரிகள், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்களை முறையாக பராமரிக்கவும், பழைய வாகனங்களை பொது ஏலத்தில் விட கோரிய வழக்கு குறித்து முறையான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
நெல்லை கோணியூரைச் சேர்ந்த சுந்தரவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பொதுப் பணித்துறையினருக்கு சொந்தமான பழைய வாகனங்கள் கட்டிடங்களின் பின்புறம் எவ்விதமான பராமரிப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளன. திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதால் மழை மற்றும் பருவ நிலை காரணமாக பழுதாகும் நிலை உள்ளது. இதனால் இவ்வாகனங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. அந்த வாகனங்களை முறையாக பராமரிப்பது அலுவலர்களின் கடமை. ஆனால், பெரும்பாலான இடங்களில் அவ்வாறு பொதுப்பணி துறையினருக்கு சொந்தமான வாகனங்களை பராமரிக்கப்படுவதில்லை கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை பழைய ரோடு ரோலர், லாரிகள், டிப்பர் லாரி உள்ளிட்டவை எவ்விதமான பராமரிப்பு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுவதால் பொதுப்பணி துறையினரின் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான வாகனங்களை முறையாக பராமரிக்கவும் பழைய வாகனங்களை பொது ஏலத்தில் விடவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து முறையான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்துவைத்தனர்.
மற்றொரு வழக்கு
இராஜபாளையம் அரியவகை சாம்பல் நிற அணில்களின் சரணாலய பகுதியில் இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையை திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க கோரிய திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்து தமிழக நெடுஞ்சாலை துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சேர்ந்த அந்தோணிராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் நெடுஞ்சாலை துறையின் விரிவாக்க பணியின் தொடர்ச்சியாக இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையை திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க ரூ.8.34 கோடியில் பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையின் வழியாக தான் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இது மட்டுமன்றி இராஜபாளையம் பகுதியானது மேற்குத்தொடர்ச்சி மலையின் மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் 1988 முதல் தற்போது வரை இந்த பகுதி அரியவகை சாம்பல் நிற அணில்களின் சரணாலய பகுதியாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் எந்தவொரு சாலை அமைக்கும் பணி தமிழக அரசின் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று தான் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது ராஜபாளையம் புதிய பேருந்து நிறுத்தத்திலிருந்து 8 கிலோ மீட்டர் நீளம் வரை சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என்பதால் ஏற்கனவே, உள்ள 7 மீட்டர் அகலத்திற்கே சாலை அமைக்கப்பட்டு சரணாலயம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யக்கூடாது என விரிவாக்க பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2 கிலோமீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட புதிய இணைப்பு சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அரியவகை சாம்பல் நிற அணில்களின் சரணாலய பகுதியில் இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையை திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க கோரிய திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக நெடுஞ்சாலை துறை செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion