கொடைக்கானலில் முகக்கவசம் அணியாதவர்களிடம் காலில் விழுந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை அருகே முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளின் காலில் விழுந்து முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வழங்கிய தனியார் தொண்டு நிறுவன இளைஞர்கள்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீறி வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிவதை பார்க்க முடிகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற கொரோனா வைரஸ் பரவலின் கட்டுப்பாடுகள் இன்றி இருப்பதும் தெரியவந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரிச்சாலை அருகே முகக்கவசம் அணியாமல் வந்த சுற்றுலா பயணிகளின் காலில் விழுந்து முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இளைஞர் குழுவினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான ஏரிச்சாலை அருகே சென்னையை சேர்ந்த ’கடமை தனியார் தொண்டு நிறுவன இளைஞர்கள்’ , கொடைக்கானல் பகுதியில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு மக்கள் எப்படி தயாராக வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அனைத்து பொதுமக்களும் வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கொரோனா பரவல் கட்டுப்படுகள் குறித்தும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம் மற்றும் பறை இசை கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொடைக்கானல் பகுதிகளில் நடந்து வருகிறது.
இதனையடுத்து முகக்கவசம் இல்லாமல் கொடைக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகளிடம் காலில் விழுந்து முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டாம் எனவும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறி சுற்றுலா பயணிகளுக்கு முகக்கவசத்தை இளைஞர்கள் வழங்கினர்.
இந்த இளைஞர்களின் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கொடைக்கானல் பகுதியை சுற்றியுள்ள மேல்மலை உள்ளிட்ட பல்வேறு மலைகிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மலைகிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை குறித்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகலாக தற்போதும் வருகை தருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் அலையை நோக்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தற்போது மீண்டும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
100 சதவீதம் பேருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொடைக்கானல் நகராட்சி சாதனை...!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற