அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை, ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய கோரிக்கை !
”ஆன்லைன் முன்பதிவு என்பது விவசாயிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது, எனவே ஆன்லைன் முன்பதிவு முறையை திரும்ப பெற வேண்டும்” - எனவும் கோரிக்கை.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உள்ளூர் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரியும் ஆன்லைன் முன்பதிவு முறையை திரும்ப பெற வேண்டி காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பொங்கல் ஜல்லிக்கட்டு தொடர்பான மனு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது முதல் போட்டியாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டியின் போது அவனியாபுரத்தை சேர்ந்த உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் கிடைக்காத நிலையில், இதனை தவிர்க்க அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உள்ளூர் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என கூறி காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
ஆன்லைன் முன்பதிவு முறையை திரும்ப பெற வேண்டும்
இது குறித்து பேசிய காளை உரிமையாளர்கள்...” அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள் சிறப்பாக விளையாடக்கூடிய நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 போட்டிகளிலும் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், ஆன்லைன் முன்பதிவு என்பது விவசாயிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது, எனவே ஆன்லைன் முன்பதிவு முறையை திரும்ப பெற வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தனர்.





















