Alanganallur Jallikattu: அயர்லாந்து To அலங்காநல்லூர்... ஏமாற்றத்துடன் சென்ற வெளிநாட்டு வீரர் - நடந்தது என்ன?
Alanganallur Jallikattu 2025: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைத்து நேரில் பார்வையிட்டார்.

Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரராக ஆன்லைனில் முன்பதிவு செய்து மருத்துவ பரிசோதனையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்டனி ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றார்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்டனி கொன்லன் என்பவர் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்குவதற்காக தன்னை மாடுபிடி வீரராக ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து டோக்கன் பெற்ற ஆன்டனி மருத்துவ மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டார். அதில் ஆன்டனி வயதின் மூப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆண்டனி மிகுந்த வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
ஜல்லிக்கட்டை பார்க்க மலேசியாவில் இருந்து மதுரை வந்த மாற்றுத்திறனாளி!
இந்த நிலையில், மலேசியா வாழ் தமிழரான மாற்றுத்திறனாளி சுப்ரமணியம் தனது மனைவியுடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்துள்ளார். தொலைக்காட்சியில்தான் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துள்ளேன். இன்று நேரில் பார்க்க வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கிவைத்து நேரில் பார்வையிட்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கியது. போட்டியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் போட்டியினை தனது மகன் இன்பநிதியோடு சேர்ந்து போட்டியினை பார்வையிட்டு தங்க காசுகளை பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டியில் 1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு சுற்றுகளிலும் காளைகளை பிடிப்பவர்களின் அடிப்படையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் பின்னர் 10 சுற்றுகளிலும் சிறப்பாக விளையாட தேர்வாகக்கூடிய மாடுபிடி வீரர்கள் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்
போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கு டிராக்டரும், மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது பரிசாக ஷேர் ஆட்டோவும் மூன்றாவது பரிசாக பைக்குகளும் பரிசு வழங்கப்படவுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது பரிசு தொடர்பாக போட்டியின் முடிவில் அறிவிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று போட்டியின் போது சிறப்பாக விளையாடி வெற்றிபெறக்கூடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன
போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படவுள்ளனர்.
போட்டியின் போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள போலியான ஆவணங்களை பயன்படுத்தி காளை உரிமையாளரோ, மாடுபிடி வீரர்களோ கலந்துகொண்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
போட்டியில் காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரிய மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
.இந்த போட்டியை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியின்போது சிகிச்சைக்காக 200 மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினரும், 60 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்
மேலும் தீயணைப்பு நிலைய வாகனங்கள், 15 108 ஆம்புலன்ஸ்கள், காளைகளுக்கான ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.





















