தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 7-ம்வகுப்பு மாணவன் உயிரிழப்பு: அதிகாரிகள் மெத்தனம் காரணமா?
ஆர்.டி.ஓ., அலுவலர் விரைவாக செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் நிகழாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை அருகே உள்ள வேம்பத்தூர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு மாணவர்களை வழக்கம் போல் அழைத்து வர தனியார் வாகனம் சென்றுள்ளது. அப்பொழுது மாணவர்களை அழைத்துக் கொண்டு சருகனேந்தல் பகுதியில் வரும்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளி வாகனம் தலைகீழாகக் சாலையின் ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்த நிலையில், வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி - கற்பகவல்லி தம்பதியின் மகன்
ஹரிவேலன் வயது (13) என்ற 7-ம் வகுப்பு மாணவன் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி தற்போது 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த மாணவர்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவக்கல்லூரி டீனிடம் மாணவர்கள் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து ஆட்சியர் கூறுகையில்..,” அனுமதியின்றி வாடகைக்கு தனியார் வாகனம் இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும். இது போன்று பிற பள்ளிகளில் இயங்குவதாக தகவல் வந்துள்ளது. இதனை கல்வித்துறை மற்றும் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பின்தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இது குறித்து ஆர்.டி.ஓ., மூக்கன் நம்மிடம் தெரிவிக்கையில்..." சிவகங்கையில் வாகனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சட்ட விரோதமாக செயல்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது விபத்தி ஏற்பட்ட வாகனம் பள்ளியின் நேரடி வாகனம் இல்லை. பள்ளியின் வாடகை வாகனம். இது எங்களிடம் அனுமதி பெறாமல் இயக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்துள்ளோம். வாகனங்கள் முறையான அனுமதி பெறாமல் இயக்கினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
ஆர்.டி.ஓ., என்று சொல்லப்படும் போக்குவரத்து அதிகாரி முறையாக செயல்படாமல் மெத்தனமாக இருப்பதால் இது போன்ற விபத்துகள் அதிகளவு நடைபெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. எனவே ஆர்.டி.ஓ., அலுவலர் விரைவாக செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற விபத்துக்கள் நிகழாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்