"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
இந்தியாவில் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடப்பதாகவும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தங்களுக்கு தலைவர்கள் இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மகாபாரதத்தில் இரு வேறு கொள்கைகளுக்கு இடையே போர் நடந்தது போன்று இந்தியாவில் யுத்தம் நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு பக்கம் அரசியலமைப்பை காப்பவர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொருவர் இருக்கின்றனர். தமிழ்நாட்டுக்கு பெரியார், குஜராத்துக்கு காந்தி, மகாராஷ்டிராவுக்கு புலே, அம்பேத்கர் ஆகியோர் இருக்கின்றனர் என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக ஆளும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கின. இப்படிப்பட்ட சூழலில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது.
"சித்தாந்தங்களுக்கு இடையே போர்"
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், "எனது முதல் உரையில் கூறியதுபோன்று, இந்தியாவில் இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையே போர் நடக்கிறது.
மகாபாரதத்தை விவரித்தேன். குருஷேத்திர போரை விவரித்தேன். இந்தியாவில் இன்று யுத்தம் நடக்கிறது. இந்தப் பக்கத்தில் (எதிர்க்கட்சிகளின் பக்கம்) அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்கள் இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எங்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து கேட்டால் பெரியார் என்று சொல்வோம். கர்நாடகாவில் இருந்து கேட்டால், பசவண்ணா என்று சொல்வோம். மகாராஷ்டிராவில் இருந்து கேட்டால், புலே, அம்பேத்கர் என்று சொல்வோம். குஜராத்தில் இருந்து கேட்டால் மகாத்மா காந்தி என்று சொல்வோம்.
பெரியாரை மேற்கொள் காட்டிய ராகுல் காந்தி:
நீங்கள் இந்த தலைவர்களை தயங்கித் தயங்கிப் புகழ்கிறீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியா முன்பு எப்படி இயங்கிக்கொண்டிருந்ததோ அப்படித்தான் இயங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த சின்னத்தின் பெயர் (கையில் சைகை காட்டி) அபயமுத்ரா.
நம்பிக்கை, வலிமை மற்றும் அச்சமின்மை ஆகியவை திறமை மூலம், கட்டைவிரல் மூலம் வருகின்றன. இந்த மக்கள் (ஆளுங்கட்சி) இதற்கு எதிரானவர்கள். ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரியார் வெட்டியது போல், ஒட்டுமொத்த தேசத்தின் கட்டை விரலையும் வெட்டுவதில் மும்முரமாக இருக்கிறீர்கள்.
#WATCH | During discussion on 75th anniversary of adoption of the Constitution of India, Lok Sabha LoP Rahul Gandhi says, "I described, in my first speech, the idea of a battle taking place, I described the Mahabharat, described Kurukshetra. There is a battle taking place today… pic.twitter.com/a9XKsY99ek
— ANI (@ANI) December 14, 2024
தாராவியை அதானியிடம் ஒப்படைக்கும் போது, தொழில் முனைவோர், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை நீங்கள் அதானியிடம் ஒப்படைக்கும்போது, நேர்மையாக வேலை செய்யும் இந்தியாவின் அனைத்து நியாயமான வணிகர்களின் கட்டைவிரலைத் துண்டித்தீர்கள்" என்றார்.