பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி சமீப காலமாக உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார். அதனால் அவர் அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சினை காரணமாக சிகிச்சையும் பெற்று வருகிறார்.
ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதேபோல் தற்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 96 வயதாகும் அத்வானி தற்போது அதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கும் முன்னதாக கடந்த ஜூலை மாதம் அத்வானிக்கு சிறுநீரக தொடர்பான தொற்று ஏற்பட்டு அப்போதும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த மார்ச் மாதம் அத்வானிக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அத்வானியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று விருதை வழங்கி கவுரவித்தார்.
பாஜகவை கட்டமைத்ததில் அத்வானிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் 2002 முதல் 2004 வரை துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.