கரூர் அருகே மாணவி தூக்கு போட்டு தற்கொலை; நீட் தேர்வு பயம் காரணமா..?
ப்ரீத்தி ஸ்ரீ கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பி எஸ் கிடைக்கவில்லை. ஆனால், கால்நடை மருத்துவருக்கான கட் ஆப் கிடைத்துள்ளது.
கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்து உள்ளது கொள்ளுதின்னி பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் சேகர். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள். ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. வயது 18. தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் (326 கட் ஆப்) பெற்றதால் எம்.பி.பி எஸ் கிடைக்கவில்லை. ஆனால் கால்நடை மருத்துவருக்கான கட் ஆப் கிடைத்துள்ளது.
ஆனால், எம்.பி.பி.எஸ் தான் படிப்பேன் என கூறி வந்த அந்த மாணவி இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் நடந்த நீட் தேர்வினை எழுதி வந்த மாணவி பாட்டி வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு பலரும் சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த மாணவி பாட்டியின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த பாட்டி மாணவியை பலமுறை கூப்பிட்டும் வராததால் வீட்டினுள் சென்று பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தவர்கள், மாணவியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ப்ரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்