காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
Kanchipuram Accident : காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 28 பேர் படுகாயம்.
காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் ஏறிச்சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் படுகாயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூக்க நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஓட்டிவாக்கம்,கூத்திரம் மேடு பகுதியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை பகுதியில் துக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் காஞ்சிபுரத்திலிருந்து மினி லாரி மூலம் சென்றுள்ளனர்.
அப்போது துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மினி லாரி தாமல் அருகே டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து கொடூர விபத்துக்குள்ளானது. இந்த மினி லாரியில் பயணம் செய்த 28 பேர் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மினி லாரியில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
விரைந்து சென்ற ஆம்புலன்ஸ்கள்
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த பாலுசெட்டி போலீசார் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பந்தப்பட்ட விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக படுகாயம் அடைந்த நபர்கள் காவல்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவர்கள் அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நபர்களுக்கு தேவை ஏற்பட்டால் சென்னை அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ மற்றும் எம்பி ஆறுதல்
தகவல் அறிந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் எம்பி க. செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது. பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.