பிரியாணியில் ஈ! ₹50,000 மிரட்டல்: காஞ்சிபுரம் பிரியாணி கடையில் பரபரப்பு, உரிமையாளர் புகார்!
பிரபல பிரியாணிக் கடையில் பரபரப்பு: உணவில் ஈ இருந்ததாக கூறி பணம் கேட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக புகார் - பணம் பறிக்க முயற்சி என உரிமையாளர் மறுப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணியில் ஈ இருந்ததால் புகார் பிரியாணியை சாப்பிட்ட ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பணம் கேட்டு மிரட்டி பணம் கொடுக்காமல் செல்லவே இந்தப் புகார் அளிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரியாணி கடை மீது புகார்
காஞ்சிபுரம் மாநகராட்சி வெள்ளைக்குளம் பகுதியை சேர்ந்த சூரியராஜன் என்பவர், தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவரது அண்ணனின் பிரியாணியில் ஈ போன்ற ஒரு பூச்சி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சூரியராஜன் கூறினார். மேலும் சூரியராஜன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிமையாளர் பரபரப்பு புகார்
இந்தச் சம்பவம் குறித்து, பிரியாணி கடை உரிமையாளர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், சூரியராஜன் மற்றும் அவருடன் வந்த பத்து பேர் உணவில் ஈ இருப்பதாகக் கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் கூறியதை அடுத்து உணவைச் சோதித்தபோது, அதில் ஈ இல்லை என்றும், வேறு உணவு வேண்டுமென்றால் மாற்றிக் கொடுப்பதாகக் கூறியபோது, ஊழியர்களிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.
50,000 கேட்டு மிரட்டல் ?
காவலர்களுக்குத் தகவல் அளித்தால் கடையை அடித்து நொறுக்கி விடுவதாக மிரட்டியதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்காமல் இருக்க ₹50,000 பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால், ₹3,000-க்கும் மேல் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிமையாளர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















