முக்கிய பதவியை தூக்கி எறிந்த கவுன்சிலர்கள்... அதிர்ச்சியில் உறைந்த திமுக மேயர்?
51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த சமயத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது மேயர் தரப்பிற்கு பெரிய தலைவலி தான் போல
காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் தற்போதைய மேயராக மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மகாலட்சுமிக்கு ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருந்த வண்ணம் உள்ளன. திமுக அவருக்கு மேயராக சீட் வழங்கிய பொழுது, அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் மேயருக்கு போட்டியிட்டார். அவருக்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுகவின் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தது. மகாலட்சுமி யுவராஜுக்கு முதல் சோதனை, மேயர் தேர்தலில் இருந்தே துவங்கிவிட்டது.
பிரச்சனையின் துவக்க புள்ளி
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கும், மகாலட்சுமி யுவராஜ் தரப்பிற்கும் பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியது. அதேபோன்று மாநகராட்சி முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கவே கடும் நெருக்கடி உருவாக துவங்கியது. மாநகராட்சி ஆணையராக இருந்த கண்ணன், மேயர் தரப்பு அழுத்தத்தால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்பொழுது மாநகராட்சி ஆணையராக உள்ள செந்தில் முருகன் மேயர் தரப்பிற்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகவும், மற்ற கவுன்சிலர்களை கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது. கவுன்சிலர்கள் நேரடியாக ஆணையரை சந்திக்க கூட முடிவதில்லை என்ற புகார் வெளிப்படையாகவே திமுக கவுன்சிலர்களால் வைக்கப்பட்டது.
பனிப்போர்
இந்தநிலையில் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கு இடையே பனிப்போர் துவங்கியது. இதன் காரணமாக பெரும்பான்மை இருந்தும் தீர்மானங்களை, நிறைவேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் மேயர் மகாலட்சுமி. கணவர் யுவராஜின் ஆதிக்கம் மாநகராட்சி முழுவதும் இருப்பதாகவும், ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே பயன் பெற்று வருவதாகவும் ஆளும் திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டை அள்ளி வீசினர்.
சமாதான பேச்சு வார்த்தை
தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிரச்சனைகள் அதிகரித்து வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என புகார் மனு அளித்தனர். இப்படி மேயர் தரப்பிற்கும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே பிரச்சனை அதிகரித்த வண்ணம் இருந்தன. பிரச்சினை அதிகரிக்கவே சமாதான பேச்சு வார்த்தைகளும் பலமுறை நடைபெற்றது. அமைச்சர் நேரு அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தையும் செய்து பார்த்தார் இருந்தும் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை.
மாநகராட்சி நிலை உறுப்பினர் பதவி
இந்தநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் ,மொத்தம் நான்கு குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் குழு உறுப்பினராக இருந்தவர்கள் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இன்று 10 உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர். திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக தொடர்ந்து, கவுன்சிலர்கள் போர் கொடி தூக்கிருக்கும் சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தொடர் தலைவலியில் மேயர் தரப்பு
திமுக மேயர் எதிர்ப்பு கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஆகிய எண்ணிக்கையை வைத்து பார்க்கும் பொழுது மேயர் தரத்திற்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேயர் தரப்பிற்கு எதிராக 30 கவுன்சிலர் வரை இருப்பதாக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர். 51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த சமயத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது மேயர் தரப்பிற்கு பெரிய தலைவலி தான் போல. மறுபடியும் தலைமைக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லவும் திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை சுந்தர் தலைமையில் நடைபெற உள்ளது