மக்களுக்கு பிரச்சனையா ? களத்தில் இறங்கிய அதிமுக.. ஶ்ரீபெரும்புதூரில் நடந்த சம்பவம்..!
Sriperumbudur Admk Protest: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைச்சர் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி தொடர்ந்து பிற அமைச்சர்கள் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ள நிலையில், இனி அமைச்சரவை கூட்டம் சிறைச்சாலையில் தான் நடத்த நேரிடும் வைகைச் செல்வன் ஸ்ரீபெரும்புதூரில் பேட்டியளித்தார்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் திமுக அரசு போட்டுள்ளதாக அதிமுக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாதாள சாக்கடை திட்டம்
விழாவில் பேசிய அதிமுக நிர்வாகிகள் தெரிவித்ததாவது: ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில், நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைப்பதற்காக, அம்மா ஆட்சியில் 102.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
கடந்த ஆட்சியின்போது, பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு 59.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 நீர்தேக்கத் தொட்டிகளும், சுமார் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டது. தற்போது இவை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் நகர மக்கள் பயன்படும் வகையில் அதிமுக சார்பில் இலவச குடிநீர் வாகனமும் துவக்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகைச் செல்வன் தெரிவித்ததாவது:
மேலும், பெண்களை இழிவாகவும் ஏளனமாகவும் பேசியதால், தமிழகம் முழுவதும் பெண்களும் கொந்தளித்தார்கள் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக திமுக அரசு பயந்து ராஜினாமா செய்ய வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போன்று பிற அமைச்சர்களான துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்ற அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆகவே இனி அமைச்சரவை கூட்டம் சிறைச்சாலையில் தான் நடத்தும் நிலை ஏற்படும் போல உள்ளது.
கோவையில் இளைஞர்கள் அதிகமாக தவெக தலைவர் நடிகர் விஜய் குடியிருந்தாலும் அதிமுக எழுச்சியுடன் உள்ளது, வருங்கால சட்டமன்ற தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்கும் என ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் முனைவர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் , காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சருமான ஏ.சோமசுந்தரம், மாவட்டக் கழக துணைச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.





















