(Source: Poll of Polls)
8 மாதங்கள் கழித்து மாநகராட்சி கூட்டம்.. நெருக்கடியில் மேயர் தரப்பு... காத்திருக்கும் எதிர் தரப்பு
Kanchipuram Mayor: காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் 8 மாதங்கள் கழித்து நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார்.
நெருக்கடியில் மகாலட்சுமி யுவராஜ்
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானம்
மாநகராட்சி ஆணையரிடம் 33 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுத்தனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கையில் தீர்மானத்திற்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் ஆகியவை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்து வைத்திருந்தனர். மேயர் உட்பட யாரும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
8 மாதங்கள் கழித்து
இந்நிலையில் தற்போது 8 மாதங்கள் கழித்து மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டமானது வருகிற செப்டம்பர் 3ந் நடைபெறுவதாகவும், அக்கூட்டத்தில் வைக்கப்படவுள்ள தீர்மானங்கள் குறித்த தீர்மான புத்தகம் எனும் அஜெண்டா அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எவ்வித அடிப்படை பிரச்சைகளுக்கான முக்கிய பணிகள் குறித்து எவ்வித தீர்மானங்களும் அந்த அஜெண்டாவிக் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை எழுந்துள்ளது.
கூட்டம் நடைபெறுமா ?
ஏற்கனவே நம்பிக்கை இல்லாத தீர்மானம், ஒரு கவுன்சிலர் கூட வராமல் தோல்வியில் முடிந்த நிலையில், நாளை நடைபெற இருக்கும் மாமன்ற கூட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 17 கவுன்சிலர்கள் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டால் மட்டுமே இந்த கூட்டத்தை நடத்த முடியும். அதேபோன்று இந்த கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், 27 கவுன்சிலர்களின் ஆதரவு மேயர் தரப்பிற்கு தேவைப்படுகிறது.
மேயர் எதிர்தரப்பு கவுன்சிலர்கள் செய்யப் போவது என்ன ?
ஏற்கனவே 33 கவுன்சிலர்கள் மேயர் தரப்பிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது மேயருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தீர்மானத்திற்கும், எதிர் தரப்பு கவுன்சிலர்கள் ஆதரவு தரவில்லை என்றால் மீண்டும் இது மேயர் தரப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும்.
8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் இல்லாமல், ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாளை எதிர்தரப்பு கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை எதிர் தரப்பு கவுன்சிலர்கள் கலந்து கொண்டால், சில முக்கிய தீர்மானங்கள் மீது எதிர்ப்பையும் , சமாளிக்க வேண்டிய நெருக்கடி உருவாக்கியுள்ளது.