காஞ்சிபுரம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி! பருவமழைக்கு முன் நீர்வரத்து அதிகரிப்பு, காரணம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் முழுமையாக நிரம்பியுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில், தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்யாறு மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
ஜவ்வாது மலை மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக, நீர் நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலைப் பகுதியில் பெய்த கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதேபோல, ஆந்திரா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, பொன்னை ஆறு அணைக்கட்டில் இருந்து அதிக அளவு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீர், வடிகால்வாய்கள் மூலமாக நீர்நிலைகளுக்குத் திறம்படத் திருப்பிவிடப்பட்டு வருகிறது. மேலும், செய்யாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டுகளிலும் நீர் வெளியேற்றம் அபரிமிதமாக உள்ளது.
நிரம்பிய தடுப்பணைகள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அணைக்கட்டில் இருந்து 6448 கன அடி நீரும், செங்கசேரி அணைக்கட்டில் இருந்து 4568 கன அடி நீரும் வெளியேறி வருகிறது. 5200 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணைக்கட்டின் உயரத்திற்கு மேல், 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதேபோன்று செய்யாறு ஆற்றில் உள்ள சிலாம்பாக்கம் அணைக்கட்டில், 4400 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. மேலும் செய்யார் ஆற்றில் உள்ள வெங்கச்சேரி அணைக்கட்டில் இருந்து, 4500 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
செய்யாறு போலவே காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய பிரதான ஆறான பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அணைக்கட்டில் 7000 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த உபரி நீர் அனைத்தும் கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்குத் திருப்பி விடப்பட்டு வருகின்றன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஆற்றில் தண்ணீர் செல்வதாலும், ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாலும் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















