Original Kanchipuram Silk Saree: காஞ்சிபுரம் பட்டு வாங்க போறீங்களா ? - ஏமாறாமல் இருக்க முக்கிய டிப்ஸ் இதோ ?
How to Identify Original Kanchipuram Silk Saree: பாரம்பரியமான உண்மையான காஞ்சிபுரம் பட்டு புடவைகள் வாங்குவது எப்படி என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
How to Find Original Kanchipuram Saree: காஞ்சிபுரம் பட்டு புடவைகள் என்றாலே பெண்களுக்கு அளப்பரிய பிரியம் தான். என்னதான் விதவிதமான புடவைகள் வந்தாலும், பட்டுப்புடவைகளை பெண்கள் அணியும் பொழுது தனி அழகுதான். நீங்கள் வாங்கும் பட்டுப் புடவைகள் உண்மையான பட்டுப்புடவைகள் தானா? காஞ்சிபுரம் பட்டு புடவை என ஏமாறாமல் வாங்குவது எப்படி? என்பது குறித்து முழு தகவல்களையும் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறோம்.
பட்டு நகரம் காஞ்சிபுரம் ( silk sarees - Kanchipuram )
காஞ்சிபுரம் பட்டு புடவைகள் உலக அளவில் பிரபலம். பாரம்பரியமாக கைத்தறி மூலம் நெசவாளர்களால், உருவாக்கப்படும் பட்டுப் புடவைகளுக்கு தனி அந்தஸ்து உள்ளது. இதனால் பட்டுப் புடவைகளை வாங்குவதற்கு காஞ்சிபுரத்தில் படையெடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
ஆனால், காஞ்சிபுரம் நகரில் வாங்கும் அனைத்து பட்டுப்புடவைகளும் உண்மையான அசல் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தானா என கேட்டால், அது சந்தேகம்தான். காஞ்சிபுரம் தவிர்த்து பிற ஊர்களில் தயாரிக்கப்படும் புடவைகள் காஞ்சிபுரம் பட்டு என்று ஏமாற்றி விற்கும் சில கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
காஞ்சிபுரம் பட்டு சேலை மகிமை என்ன ?
காஞ்சிபுரம் பட்டு சேலைகளை தேடி வாங்குவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. காஞ்சிபுரம் பட்டு சேலைகளை அணியும் பொழுது, கதகதப்பாகவும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் எனக் கூறுகின்றனர் நெசவாளர்கள். பல இடங்களில் செய்யப்படும் பட்டுப் புடவைகளில், ஒரு இழை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் 3 இழைகளைச் சேர்த்து ஓர் இழையாக பட்டுப்புடவை கைத்தறியில் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுத்தமான காஞ்சி பட்டுப்புடவை எடை சற்று அதிகம் 700 கிராம் வரை இருக்கும் (ஜரிகைக்கு ஏற்ப எடை அளவு அதிகரிக்கும், ஆனால் குறைவாக இருக்காது). அதில் 100 கிராம் பாடர் உள்ள ஜரிகையில் 40 கிராம் வெள்ளி, 0.2 சதவீதம் தங்கம் கலந்திருக்கும். 72 வகையான தொழில்நுட்பங்கள் காஞ்சிபுரம் பட்டுபுடவை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலில் பார்க்க வேண்டியது என்ன ?
பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சேலைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பட்டு சேலைகளில் ,
- பட்டு முத்திரை ( Silk Mark Label ) இருக்கிறதா என பார்க்க வேண்டும். இந்த முத்திரை நீங்கள் வாங்கும் பட்டு சேலையில் தூய பட்டு பயன்படுத்தியதற்கான அடையாளமாக உள்ளது. (போலியாகவும் தயாரிக்கப்படுகிறது அதை நீங்கள் தொட்டுப் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம் )
- கைத்தறி முத்திரை (handloom mark logo) : கைத்தறியில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலை என்பதை உறுதிப்படுத்தும் முத்திரை.
- புவிசார் குறியீடு: காஞ்சிபுரம் பட்டு சேலைக்கு என புவிசார் குறியீடு கொடுக்கப்படும், காஞ்சிபுரத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பட்டு சேலை ரகங்களுக்கு மட்டுமே, இந்த முத்திரை கொடுக்கப்படும்.
- ஜரிகை அங்கீகார அட்டை: நீங்கள் வாங்கும் சேலையில் எவ்வளவு தங்கம், எவ்வளவு வெள்ளி, எவ்வளவு பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்து அங்கீகார அட்டை வழங்கப்படும். இது மிக முக்கிய ஒன்றாக உள்ளது. உங்கள் பட்டுப் புடவையின் மதிப்பும், சரிகையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. இந்த பட்டு சேலையை நீங்கள் விற்க சென்றால், எவ்வளவு சரிகை இருக்கிறதோ அதற்கு ஏற்ற பணம் கிடைக்கும்.
ஜரிகை டெஸ்ட் ( Zari Test )
- ஜரிகையை உரசி பார்த்தால் அதன் நிறம் மாறாமல் இருந்தால் ஒரிஜினல் பட்டு.
- பட்டுப்புடவையில் உள்ள ஜரிகையை கொஞ்சம் கட் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை நெருப்பில் காட்டினால் எரிந்து புகை வரும். அது sulfur போல வாசனை வரும். ஒரிஜினல் பட்டு கொண்டு தயாரிக்கப்பட்டதில் மட்டுமே இப்படி வாசனை வரும்.
இதைவிட தெளிவாக கண்டுபிடிக்கும் மிக முக்கிய வழி ஒன்று உள்ளது. தமிழ்நாடு அரசு சரிகை நிறுவனம் சார்பில், சரிகை பரிசோதனை நிலையம் ( Zari Teating Centre ) உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளது. காஞ்சிபுரத்தை பொருத்தவரை, காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள, சரிகை பரிசோதனை நிலையத்திற்கு சென்றால் 5 நிமிடத்தில் உங்கள் சேலையை சோதனை செய்து, உண்மை தன்மை குறித்து, பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழையும் கொடுத்து விடுவார்கள். பட்டு சேலை சோதனை செய்ய 80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல ஆயிரம் முதலீடு செய்து சேலை வாங்கும் நாம், உண்மையை தெரிந்து கொள்ள 80 ரூபாய் செலவு செய்வதில் தவறில்லையே.