காஞ்சிபுரம் மேயர் விவகாரம்! அப்சட்டான எடப்பாடி! "எம்எல்ஏ எலக்சன்ல தப்பு நடக்கக்கூடாது" என எச்சரிக்கை!
"காஞ்சிபுரம் சுற்றுப்பயணம் வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மேயர் விவகாரத்தில் நடந்த தவறு சட்டமன்றத் தேர்தலில் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது"

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, உத்திரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் மேயர் விவகாரத்தில் நடந்ததை போன்று, சட்டமன்றத் தேர்தலில் தவறு நடக்கக்கூடாது என அதிமுக நிர்வாகிகளில் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி விவகாரம்
சென்னை புறநகர் பகுதியில் மிக முக்கிய பகுதியாக காஞ்சிபுரம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள், இதில் திமுக 32 உறுப்பினர்கள், அதிமுக 8 உறுப்பினர்கள் , பாமக 2 , தமிழ் மாநில காங்கிரஸ் 1, பாஜக 1, காங்கிரஸ் 1 மற்றும் 6 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயராக, மகாலட்சுமி யுவராஜ் செயல்பட்டு வருகிறார்.
மேயரை காப்பாற்றிய அதிமுக கவுன்சிலர்கள்
இந்தநிலையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் எதிராக, தங்கள் வார்டுகளில் சரிவர பணிகள் நடைபெறவில்லை என்று பல்வேறு கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினார்கள் பல கூட்டங்களில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கட்சி பேதமின்றி ஓரணியில் நின்று எதிர்த்ததால் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழல் கூட ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 மாதங்களாக மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மெஜாரிட்டி இல்லாமல் கூட்டம் நடைபெறாமல் இருந்த சூழலில், 18 மாமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே மாமன்றதீர்மானங்கள் நிறைவேற்ற முடியும் என்ற நிலைமை இருந்தது. 15 திமுக உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 3 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஆதரவளித்தார்கள். இதனால் மேயர் பதவி தப்பித்தது. அதிமுக கவுன்சிலர்கள் அகிலா தேவதாஸ், வேலரசு, பிரேம்குமார் ஆகியோர் கையெழுத்து போட்டதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை மாதம் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி மற்றும் தீர்மானமும் வெற்றிகரமாக மகாலட்சுமி யுவராஜ் நிறைவேற்றியதால், அவரது பதவி தப்பியது.
எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
காஞ்சிபுரம் வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இருக்கின்ற எந்த வாய்ப்பையும் விட்டுவிடக்கூடாது. மேயர் தேர்தலில் செய்த தவறை அதிமுகவினர் செய்யக்கூடாது. மதுராந்தகம் ஒன்றியம் மற்றும் இடைக்கழி நாடு ஆகிய பேரூராட்சி ஆகிய இடங்களில், அதிமுகவிற்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் அதிமுக நினைத்தது தான் நடந்தது. அதேபோன்று திமுக மேயருக்கு எதிரான எதிராக, திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பை பயன்படுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியமானது, நாம் போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி கட்சிப் போட்டியிட்டாலும் 100% உழைப்பை வழங்க வேண்டும். தொடர்ந்து உங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, மக்களுடன் நின்று போராடுங்கள். இப்போதே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். நமது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவது குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். கடந்த இரண்டு தேர்தலாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





















